101 |
கொடிய வேலினர்
கொடுமைசெய் தயருவா ரயரார்
நெடிய வேதனை நீர்த்தவின் னமுதென நுகர்ந்தோர்
கடிய ரேயுமக் குரியதோர் கருமமித் துணையோ
மடிய வேயுடல் மடியுமோ வுயிரென நகைப்பார். |
|
"கொடிய வேலினர்
கொடுமை செய்து அயருவார்; அயரார்
நெடிய வேதனை நீர்த்த இன் அமுது என நுகர்ந்தோர்;
'கடியரே, உமக்கு உரியது ஓர் கருமம் இத்துணையோ?
மடியவே உடல், மடியுமோ உயிர்?' என நகைப்பார். |
"கொடிய
வேலைத் தாங்கிய பகைவரே கொடுமை செய்து சோர்வர்;
நெடிய வேதனையை நல்லியல்புள்ள இனிய அமுதமென்று அனுபவித்த
நம்மவரோ சோர்வடைய மாட்டார். 'கொடியவர்களே, உங்களுக்கு
உரியதொரு செயல் இவ்வளவுதானோ? உடல் இறக்கவே, எங்கள் உயிரும்
இறந்தொழியுமோ?' என்று கூறி அப்பகைவரை எள்ளுவர்.
'உயிர்'
இங்கு ஆன்மாவைக் குறித்தது.
102 |
எரிந்த வெந்தழ
லிக்குகும் பனிமல ரென்பா
ரரிந்த வெம்படை யணிந்தபொற் பணிநல மென்பார்
பிரிந்த நல்லுயிர் பருகுநஞ் சமுதென்பார் பெருகப்
பிரிந்த வெந்துயர் புரிமண வின்பமே யென்பார். |
|
"எரிந்த வெந்
தழல் இக்கு உகும் பனி மலர் என்பார்;
அரிந்த வெம் படை அணிந்த பொற் பணி நலம் என்பார்;
பிரிந்த நல் உயிர் பருகு நஞ்சு அமுது என்பார்; பெருகப்
புரிந்த வெந் துயர் புரி மண இன்பமே என்பார். |
"நம்மவர்,
எரிந்த கொடிய நெருப்பைத் தேன் சொரியும் குளிர்ந்த
மலரென்று மதிப்பர்; தம் உடலை அரிந்த கொடிய கருவியைத் தாம்
அணிந்த பொன் அணியின் நலம் பொருந்தியதாக மதிப்பர்; தம் நல்ல
உயிர் பிரியுமாறு பருகும் நஞ்சை அமுதமென்று மதிப்பர். தமக்கு
மிகுதியாகப் புரிந்த கொடிய துயரத்தை யெல்லாம் திருமணத்தால் வரும்
மகிழ்ச்சி போன்றது என மதிப்பர்.
'பிரிந்த
நல்லுயிர்' என்பதனை, 'பிரிய நல்லுயிர்' என்று கொண்டு,
'நல்லுயிர் பிரிய' என மாற்றிக் கூட்டுக.
|