103 |
இத்தி றத்தவ
ரிறத்தல்காண் பலருமம் மறைசெய்
மெய்த்தி றத்திலிவ் வீரமா மெனவுளந் தேறி
யத்தி றத்திலங் கொருவர்மாய்ந் தாயிரர் தெளிந்து
பொய்த்தி றத்தநூற் போக்கிமெய்ச் சுருதிகைக் கொள்வார். |
|
"இத்திறத்து
அவர் இறத்தல் காண் பலரும், அம்மறை செய்
மெய்த்திறத்தில் இவ்வீரம் ஆம் என உளம் தேறி,
அத்திறத்தில் அங்கு ஒருவர் மாய்ந்து ஆயிரர் தெளிந்து,
பொய்த்திறத்த நூல்போக்கி, மெய்ச்சுருதி கைக்கொள்வார். |
"இவ்வாறு
அவர்கள் இறத்தலைக் காணும் பலரும், அந்த வேதம்
தரும் மெய்யான திறத்தினால் இவ்வீரம் ஏற்படுவதாகு மென மனம் தேறி,
அவ்வாறு அங்கு ஒருவர் இறப்பதன் மூலம் ஆயிரம் பேர் தெளிவு
கொண்டு, பொய்யோடு பொருந்திய தம் வேத நூலைப் புறக்கணித்து,
மெய்யான வேதத்தைக் கைக்கொள்வர்.
104 |
விரைத்த
வேலியே விளைவுறப் பாய்புனல் போன்றே
நிரைத்த சோரியா லென்மறை விளைவுநீள் வதுமற்
றுரைத்த வோகையா லுலந்தவ ரரசுறீஇ வான்மேல்
வரைத்த மாமையால் வரைவில வாழ்வது நோக்காய். |
|
"விரைத்த வேலியே
விளைவு உறப் பாய் புனல் போன்றே,
நிரைத்த சோரியால் என்மறை விளைவு நீள்வதும், மற்று
உரைத்த ஓகையால் உலந்தவர் அரசு உறீஇ, வான்மேல்
வரைத்த மாமையால் வரைவு இல வாழ்வதும் நோக்காய். |
"விதைத்த
வயல் விளையுமாறு பாயும் நீர்போல், நம்மவர்
வரிசையாகப் பொழிந்த குருதியால் என் வேதம் விளைச்சலில் பெருகுவதும்,
மற்று நான்முன் சொல்லிக் காட்டிய மகிழ்ச்சியோடு மடிந்தவர் அரசு பெற்று,
வானுல கிடத்து வரைந்து வைத்த அழகுடன் எல்லை இல்லாமல் வாழ்வதும்
இக்காட்சியிற் காண்பாய்.
'விரைத்த'
என்பது, 'விதைத்த' என்பதன் இடைப்போலி. 'உற்று'
என்பது 'உறீஇ' எனச் சொல்லிசை அளபெடை ஆயிற்று. 'ஓசை' என்பதும்
'உவகை' என்பதன் போலி.
|