105 |
பொன்னைக்
காட்டிய பொறியழற் போல்வதே யல்லாற்
கொன்னைக் காட்டிய கொடுமைநொந் தெஞ்சநன் மறையோ
டென்னைக் காட்டிய வீடுளோர் பகைவெல்வா ரென்றான்
மின்னைக் காட்டிய விரிமணி மேகவா கனத்தான். |
|
"பொன்னைக்
காட்டிய பொறி அழல் போல்வதே அல்லால்,
கொன்னைக் காட்டிய கொடுமை நொந்து எஞ்ச, நல் மறையோடு
என்னைக் காட்டிய ஈடு உளோர் பகை வெல்வார்" என்றான்,
மின்னைக் காட்டிய விரி மணி மேக வாகனத்தான்.
|
"பொன்னை
விளங்கச் செய்யும் பொறி பறக்கும் நெருப்பைப் போல்
அத்துன்பங்கள் ஆவதும் அல்லாமல், வீணென்று காட்டிய தம் கொடுமை
குறித்து அப்பகைவரே நொந்து மெலியும் வண்ணம், நல்ல வேதத்தின்
மேன்மையோடு என் பெருமையையும் எடுத்துக் காட்டிய வலிமையுடையோர்
பகையை வெல்வார்" என்று, பரப்பிய ஒளியைக் காட்டிய மேகத்தை
வாகனமாகக் கொண்டுள்ள திருமகன் கூறினான்.
சூசையின் பங்கு
106 |
என்னைப்
பற்றிநீ யிறந்துல களிப்பமற் றுமர்தா
நின்னைப் பற்றிமாய்ந் திகல்வெல நினக்கினி நிகர்யா
ருன்னைப் பற்றிநா னுதிரந்தந் தரசுற விரங்கிப்
பின்னைப் பற்றிநீ தருகெனப் பெருந்தவன் றொழுதான். |
|
"என்னைப் பற்றி
நீ இறந்து உலகு அளிப்ப, மற்று, உமர் தாம்
நின்னைப் பற்றி மாய்ந்து இகல் வெல, நினக்கு இனி நிகர் யார்?
உன்னைப் பற்றி நான் உதிரம் தந்து அரசு உற இரங்கி,
பின்னைப் பற்றி, நீ தருக" எனப் பெருந் தவன் சொன்னான். |
பெருந்
தவத்தோனாகிய சூசை திருமகனை நோக்கி, "என் பொருட்டு
நீ இறந்து இவ்வுலகை மீட்டுக் காக்கவும், உன்னவராகிய நல்லோர் தாமும்
உன் பொருட்டு இறந்து பகையை வெல்லவும், இதன்மேல், இனி உனக்கு
நிகர் யார்? இதனைப் பின்பற்றி, நானும் உன் பொருட்டு என் குருதியைத்
தந்து அரசு பெறுமாறு இரங்கி, நீயே வரம் தருவாயாக" என்று சொன்னான்.
|