பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 685

தீங்கு இயன்று ஆய துன்பம், திரிந்து, அறவிளைவு காண,
ஈங்கு இயன்று உதித்த நாதன், எளியன் ஆய், தனக்கு மற்றை
ஆங்கு இயன்று அமை கைத்தாதை, அனைத்தினும் அரிய துன்பப்
பாங்கு இயன்று அரசு கொள்ளப் பல பிணிபடச் செய்தானே.


     பாவமாகிய தீங்கினால் விளைந்து இவ்வுலகில் ஏற்பட்டுள்ள துன்பம்,
தன் குணம் மாறுபட்டு, அதன்மூலம் புண்ணியம் விளைவதைக் காணவென்று,
இவ்வுலகில் அமைந்து வந்து தோன்றிய ஆண்டவன், தான் ஓர்
எளியவனாய் நின்று, மற்றும் தனக்கு அவ்வுலகில் பொருத்தங் கொண்டு
அமைந்த வளர்ப்புத் தந்தை, துன்பம் அனைத்திலும் அரிய துன்பப்
பாங்கோடு அமைந்து விண் அரசு பெற அவனைப் பல நோய்களுக்கு
ஆளாகச் செய்தான்.

 
                            3
மேன்மையே பொருளா லாகி மிக்கவை யிங்க ணுண்டேற்
கோன்மையே மனிதர்க் காகுங் குன்றும்ஃ தென்று வான்மே
னோன்மையே யரசீந் தங்கண் ணுண்டகை மேன்மை யாகும்
பான்மையே சூசை புன்கண் பட்டதோர் நிலையிற் கண்டோம்.
 

மேன்மையே பொருளால் ஆகி, மிக்கு அவை இங்கண் உண்டேல்,
கோன்மையே மனிதர்க்கு ஆகும் குன்றும் அஃது என்று,
வான்மேல் நோன்மையே அரசு ஈந்து, அங்கண் நுண்தகை
மேன்மை ஆகும் பான்மையே, சூசை புன்கண் பட்டது ஓர் நிலையில்
                                             கண்டோம்.


     பொருட் செல்வத்தால் மேன்மையும் ஆகி, அவ்விரண்டும் இவ்வுலகில்
மிகுதியாக கொண்டிருந்தால், அரசும் அத்தகைய மனிதர்க்கே உரியதாகும்.
அவ்வரசு அழியுமென்று கொண்டு, பொறுமையே வானுலகில் நிலையான
அரசைத் தந்து, அவ்விடத்தில் நுண்ணிய தகைமையுடைய மேன்மையாக
அமையும் விதத்தையே, சூசை துன்பம் அனுபவித்த ஒரு நிலையின் மூலம்
கண்டறிந்தோம்.