பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 690

     முக்குடை : ஞானம், வல்லமை, அருள் என்ற மூன்றும் கொண்டு
இறைவன் உலகத்தை ஆளும் தன்மை முக்குடையாக உருவகிக்கப்பட்டது.

 
                      11
அத்திறத் தின்ப மாக வழுங்கிய துன்பந் தாங்கிக்
கைத்திறத் தியற்ற லின்றிக் காற்றிறத் திரித லின்றி
மெய்த்திறத் துருகி வாடி மேற்றிறத் தூக்கம் வாடா
வெத்திறத் தாலு மொவ்வா விருமையிற் பொலிந்தான் சூசை.
 
அத் திறத்து இன்பமாக அழுங்கிய துன்பம் தாங்கி,
கைத் திறத்து இயற்றல் இன்றி, கால் திறத்து இரிதல் இன்றி,
மெய்த் திறத்து உருகி வாடி, மேல் திறத்து ஊக்கம் வாடா,
எத் திறத்தாலும் ஒவ்வா இருமையின் பொலிந்தான் சூசை.

     வருந்திய துன்பத்தை அவ்விதத்தில் இன்பமாகப் பொறுத்துக்
கொண்டு, தன் கை வன்மையால் எதுவும் செய்ய இயலாமலும், கால்
வன்மையால் இடம் விட்டுப் போகாமலும், உடலைப் பொறுத்த வரையில்
அந்நோயினால் உருகி மெலிந்து வாடியும், மேன்மையான திறங் கொண்ட
தன் மனவூக்கம் மட்டும் வாடாமல், எவ்வகையாலும் ஒப்புக் காட்ட இயலாத
பெருமையோடு சூசை பொலிவுடன் விளங்கினான்.

                     வானவர் ஆறுதல்

     - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்

 
                       12
வரிந்த மாமையு ருக்கொடு வானவ
ரிரிந்த வோகையி லேந்திய வீணைவாய்
சொரிந்த வோதைதொ டர்ந்திசை பாடலில்
விரிந்த வாமவி ழாவணி யாயதே.
 
வரிந்த மாமை உருக் கொடு வானவர்
இரிந்த ஓகையில், ஏந்திய வீணைவாய்
சொரிந்த ஓதை தொடர்ந்து இசை பாடலில்,
விரிந்த வாம விழா அணி ஆயதே.