பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 693

                    17
விதுப்ப டும்பத மென்மலர்ச் சுந்தரி
மதுப்ப டுங்கொடி வாட்டிடர் முற்றறப்
பொதுப்ப டுந்தனிக் கோற்சுதற் போற்றினள்
புதுப்ப டும்பனித் தேனுரை போக்கினாள்.
 
விதுப் படும் பத மென் மலர்ச் சுந்தரி,
மதுப் படும் கொடி வாட்டு இடர் முற்று அற,
பொதுப் படும் தனிக் கோல் சுதன் போற்றினள்;
புதுப் படும் பனித் தேன் உரை போக்கினாள் :

     பிறைமதியை மிதித்த அடியாகிய மெல்லிய மலரைக் கொண்ட
அழகியாகிய மரியாள், தன் கணவனின் தேன் பொருந்திய மலர்க் கொடியை
வாட்டும் துன்பம் முற்றிலும் நீங்குமாறு, உலகங்களையெல்லாம் பொதுப்பட
ஆளும் தனிச் செங்கோல் கொண்ட தன் மகனைப் போற்றினாள்; புதிதாகத்
தோன்றிய குளிர்ந்த தேன் போன்ற சொற்களைப் பின் வருமாறு
சொன்னாள்:

     'கொடி' என்பது, ஆகுபெயராக, கொடியைத்தாங்கிய சூசையைக்
குறிப்பதாகவும் கொள்ளலாம். 'சுதன் + போற்றினாள்' என்பது, இரண்டாம்
வேற்றுமைத் தொகைப் பொருளில், 'சுதற் போற்றினாள்' என நின்றது.

 
                18
வேண்டு மென்பதும் வேண்டுவ தாக்கலும்
யாண்டு மொன்றென யாவுமி யற்றினோய்
நீண்டு நொந்துநின் றாதைப டுந்துயர்
காண்டு ளங்கனி யாதுகொ லோவென்றாள்.
 
"வேண்டும் என்பதும், வேண்டுவது ஆக்கலும்,
யாண்டும் ஒன்று என யாவும் இயற்றினோய்,
நீண்டு நொந்து நின் தாதை படும் துயர்
காண்டு, உளம் கனியாது கொலோ?" என்றாள்.

     "ஒன்றை வேண்டுமென்று விரும்புவதும், அவ்வாறு விரும்பிய ஒன்றை
விரும்பியவாறு ஆக்குதலும், எக்காலமும் தனக்கு ஒன்றே என்னுமாறு
எல்லாவற்றையும் ஆக்கியவனே, நீண்ட காலமாக நொந்து உன் கைத்தாதை
படும் துயரத்தைக் கண்டிருந்தும், உன் உள்ளம் கனியாதோ? என்றாள்.