பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 695

               21
மீனி னின்றொளி மேய்முடி யாட்கவன்
வானி னின்றிவ ணான்வந்து தேடிய
வூனி னின்றுறுந் துன்பநன் றாயினுந்
தேனி னின்றுயர்ச் செய்தியைக் கேளென்றான்.
 
மீனினின்று ஒளி மேய் முடியாட்கு, அவன்,
"வானினின்று இவண் நான் வந்து தேடிய,
ஊனினின்று உறும் துன்பம் நன்று ஆயினும்,
தேனின் இன் துயர்ச் செய்தியைக் கேள்" என்றான்.

     விண்மீன்களின்று ஒளி பரவும் முடியை அணிந்துள்ள மரியாளை
நோக்கி, அத்திருமகன், "வானுலகினின்று இங்கு நான் வந்து தேடி எடுத்துக்
கொண்ட உடலினின்று விளையும் துன்பம் நல்லதே யாயினும், தேனினும்
இனிய துயரத்தைப் பற்றிய மற்றொரு செய்தியும் நான் சொல்லக் கேள்"
என்று, மேலும் தொடர்வான் :

 
             22
நோய ருந்தலி வற்கென நொந்துடல்
காய முண்டலெ னக்கெனக் கண்டுளந்
தீய ருந்தலு னக்கெனச் சீர்த்தவோர்
தூய ருந்தயைச் சூட்சியி தாமென்றான்.
 
"நோய் அருந்தல் இவற்கு என, நொந்து உடல்
காயம் உண்டல் எனக்கு என, கண்டு உளம்
தீ அருந்தல் உனக்கு என, சீர்த்த ஓர்
தூய் அருந் தயைச் சூட்சி இது ஆம்" என்றான்.

      "நோயை அனுபவித்தல் இவனுக்கு உரியது எனவும், நொந்து உடல்
காயங்களை மிகுதியாக ஏற்றுக்கொள்ளல் எனக்கு உரியது எனவும்,
இவற்றைக் கண்டு உள்ளம் தீயை விழுங்கியது போல் வருந்துதல் உனக்கு
உரியது எனவும், இறைவன் சிறந்த ஒரு தூய அரிய தயவினால் அமைத்த
திட்டம் இது ஆகும்" என்றான்.