ஆவல் செய் அருள்
தாயும், அனைத்தையும் தொக்கு உள ஆக்கிக்
காவல் செய் திரு மகனும், கண்ணினைக் காத்த கண் இமை போல்,
ஓவல் செய் பிணி மாறா உளைந்த மா தவனை, காத்து, இருவர்,
ஏவல் செய்தனர், வானும் இயம்பு அரும் வியப்பு உற மாதோ. |
ஆவலால்
விளைந்த அருள் கொண்ட தாயும், அனைத்தையும்
ஒருங்கே படைத்துக் காக்கும் திருமகனுமாகிய இருவரும், துன்பம் தரும்
தன் நோய் மாறாமல் வருந்திய பெருந் தவத்தோனாகிய சூசையை,
கண்ணைக் காத்த கண்ணிமைகள் போல் காத்து, வானுலகமும்
சொல்லுதற்கரிய வியப்புக் கொள்ளுமாறு பணிவிடை செய்தனர்.
'கண்ணினைக்
காத்த கண் இமை போல்' என்ற வரி, 'மண்ணினைக்
காக்கின்ற மன்னன் மைந்தர்கள், கண்ணினைக் காக்கின்ற இமையின்
காத்தனர்' என்ற கம்பராமாயண (பால. 40) வரிகளை நினைவுறுத்துகின்றது.
27 |
உண்டு வாழுயிர்க்
கெல்லா முணவெலா மளித்தவ னுண்பப்
பண்டு தானுழைத் துணவு பகுத்தலே செல்வமென் கேனோ
வண்டு ழாய்க்கரத் தேந்தி வான்றொழு மரசிடு முணவு
கொண்டு தானுயிர் வாழ்ந்த கொள்கையே செல்வமென் கேனோ. |
|
உண்டு வாழ் உயிர்க்கு
எல்லாம் உணவு எலாம் அளித்தவன், உண்ப,
பண்டு தான் உழைத்து உணவு பகுத்தலே செல்வம் என்கேனோ?
வண் துளாய்க் கரத்து ஏந்தி வான் தொழும் அரசு, இடும் உணவு
கொண்டு, தான் உயிர் வாழ்ந்த கொள்கையே செல்வம் என்கேனோ? |
இவ்வுலகில்
உண்டு வாழும் உயிர்களுக்கெல்லாம் உணவு
வகைகளையெல்லாம் வழங்கிய திருமகன் உண்பதற்கு, முன் சூசை தானே
உழைத்து உணவு வழங்கியதைச் செல்வம் என்பேனோ? வானுலகம் தொழும்
அரசனாகிய திருமகன், தன் வளமான துளசி போன்ற கைகளால்
அணைத்துத்தரும் உணவைக் கொண்டு, அவன் உயிர் வாழ்ந்த நிகழ்ச்சியைச்
செல்வம் என்பேனோ?
|