பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 70

      பெரிய தவம் படைத்த சக்கரீயன் இவ்வாறு ஊமையானான்.அதனால்
வாய்ப் பேச்சின்றிக் கைச்சைகையால் பேசினான். அதனைக் கண்டோர்
அது எவ்வாறு ஆயிற்றோவென்று அஞ்சினர். தானோ செவ்விய நெறியிற்
செல்லும் உள்ளப் பாங்கினால் தெய்வத் திருவளத்தைப் போற்றினான். தான்
கொண்ட ஐயத்தின் காரணமாகத் தன்னைப் பற்றிக் கொண்ட இந்த அழிவு
நீங்குதற்கு முதற்படியாக, முன் தூது வந்து காபிரியேல் சொன்னபடியே தன்
மனைவி கருப்பமுறக் கண்டான்.அதனால் வியப்பும் எழுச்சியும் கொண்டான்.

      
காபிரியேல் : தூது வந்த வானவன் பெயர். இவனே முன் மரியாளிடம் மணத் தூதாகவும், பின் அவதார தூதாகவும் வந்தோன்.
'இருந்தவன்' என்றவிடத்து 'இருமை' பெருமை குறிக்கும் உரிச்சொல்.

 
                  10
இலங்கெழு விசும்பின் வெண்கோட்
     டிளம்பிறைக் குழவி போல
நலங்கெழு கருவிற் றோன்றல்
     நவிவளர்ந் தாறாந் திங்க
ளலங்கெழு பருவத் தெம்மை
     யளிப்பதற் கிரங்கி நாதன்
வலங்கெழு கன்னி தன்வாய்
     மைந்தனே தானு மானான்.
 
 இலங்கு எழு விசும்பின் வெண் கோட்டு இளம்பிறைக் குழவி போல
நலம்கெழு கருவில் தோன்றல் நவி வளர்ந்து, ஆறாம் திங்கள்
அலங்கு எழு பருவத்து, எம்மை அளிப்பதற்கு இரங்கி நாதன்
வலம் கெழு கன்னி தன்வாய் மைந்தனே தானும் ஆனான்.

      ஆகாயத்தில் துலங்கி எழும் வெண்ணிறமான கொம்பு முனை
கொண்ட இளம் பிறையாகிய குழந்தை நாள் தோறும் வளர்வது போல,
அம்மகனும் தன் தாயின் நலம் பொருந்திய கருவில் அழகாக வளர்ந்து
வந்தான். ஆறாம் மாதம் அசைந்து எழும் காலத்தில், ஆண்டவன் நம்மை
யெல்லாம் பாவத்தினின்று மீட்டுக் காப்பதற்கு இரக்கம் வைத்தான்.அதனால்,
தானும் வெற்றி பொருந்திய கன்னிமரியாளிடம் மகனாக உருவெடுத்தான்.