பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 708

"நிந்தை என்று உடை நான் ஓங்க, நிமிர்ந்த வான் வியப்ப, என்னை,
'எந்தை!' என்றனை நீ; உந்தைக்கு இரங்கி, நல் ஆசி, தேவ
தந்தையின் பணியைச் செய்ய, தருதி" என்று அடியில் வீழச்
சிந்தையின் எழுந்தது ஆற்றாத் திருமகன், தாங்கினானே.


     "நிந்தை என்ற ஒன்றையே உடைமையாகக் கொண்டுள்ள நான்
உயருமாறு, உயர்ந்த வானுலகமும் வியக்க, நீ என்னை, 'என் தந்தையே!'
என்று அழைத்தாய்; அவ்வாறான உன் தந்தையாகிய எனக்கு இரங்கி,
தேவ தந்தையாகிய கடவுளின் பணியை நான் நிறைவேற்ற எனக்கு நல்லாசி
தருவாய்" என்று கூறி, தன் அடியில் விழுந்து தொழும் எண்ணத்தோடு
அவன் எழுந்ததைப் பொறுக்க மாட்டாத திருமகன், அவனைத் தன்
கையால் தடுத்துத் தாங்கிக் கொண்டான்.

 
                    17
மூவுல கனைத்துந் தாங்கு முதலவ னொருபா லோர்பால்
தேவுல கனைத்து மேத்துந் தேவதாய் தாங்கச் சூசை
மேவுல குள்ளி யாக்கை விடுமுயிர் தனையன் பொன்றே
பூவுல கிருத்தி னாற்போற் பூங்கரங் கூப்பி நின்றான்.
 
மூ உலகு அனைத்தும் தாங்கும் முதலவன் ஒருபால், ஓர் பால்
தே உலகு அனைத்தும் ஏத்தும் தேவதாய், தாங்க, சூசை
மே உலகு உள்ளி யாக்கை விடும் உயிர்தனை அன்பு ஒன்றே
பூ உலகு இருத்தினாற் போல், பூங் கரம் கூப்பி நின்றான்.

     வி்ண் மண் பாதலமென்னும் மூன்று உலகங்கள் முழுவதையும் தாங்கி
நடத்தும் ஆண்டவனாகிய திருமகன் ஒரு பக்கமும், தெய்வ உலகம்
முழுவதும் போற்றும் தேவ தாயாகிய மரியாள் மற்றொரு பக்கமும்,
தன்னைத் தாங்கிக் கொண்டிருக்க, மேலுலகத்தை நினைந்து உடலைவிட்டுப்
பிரியவிருந்த தன் உயிரை, அவ்விருவர் மீது கொண்டஅன்பு ஒன்றே
இம்மண்ணுலகில் பிடித்து வைத்து இருத்தினாற்போல், சூசை தனது
மலர்போன்ற கைகளைக் குவித்த வண்ணம் நின்றான்.