பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 709

                     18
பன்னலா னிகரா வண்ணம் பயனுனாற் பெற்றெ னானே
மின்னலா யுனக்கீங் கென்னால் விளைந்தபற் கசடுண் டாமே
நின்னலாற் பொறுப்பார் யாரே நீத்திவை யருளி னார்வ
முன்னலா லாசி செய்கென் றுயர்தவன் றொழுது நின்றான்.
 
"பன்னலால், நிகரா வண்ணம், பயன் உனால் பெற்றேன் நானே;
மின்னலாய், உனக்கு ஈங்கு என்னால் விளைந்த பல் கசடு உண்டு
                                        ஆமே;
நின் அலால், பொறுப்பார் யாரே? நீத்து இவை, அருளின் ஆர்வம்
உன்னலால், ஆசி செய்க" என்று, உயர் தவன், தொழுது நின்றான்.

     மேலான தவத்தோனாகிய சூசை, திருமகனை நோக்கி, "சொல்லுதலால்
ஒப்பிட்டுக் காட்ட முடியா வண்ணம், மின்னல் போன்றவனே, நானே
உன்னால் பயன் அடைந்தேன்; உனக்கு இங்கு என்னால் விளைந்த பல
குறைகளே உண்டு; உன்னைத்தவிர அவற்றையெல்லாம் பொறுப்பவர் யார்?
இவற்றையெல்லாம் கருதாது விலக்கி, உனது அருளின் ஆர்வம் ஒன்றையே
கருதும் முறையால், எனக்கு ஆசி வழங்குவாய்" என்று தொழுது நின்றான்.

 
                 19
இருவரு மிருபா லாசி யிட்டரு ளுரையிற் றேற்ற
வுருவரும் வானோர் சூழ வொலிக்குழ லிசையிற் பாடி
மருவரு மலரைச் சிந்தி வயவையில் விளித்து முன்னத்
திருவரு மாக்கை நீக்கித் தெள்ளுயிர் போயிற் றம்மா.
 
இருவரும் இரு பால் ஆசி இட்டு அருள் உரையின் தேற்ற,
உரு வரும் வானோர் சூழ, ஒலிக் குழல் இசையின் பாடி,
மரு வரு மலரைச் சிந்தி, வயவையில் விளித்து முன்ன,
திரு வரும் ஆக்கை நீக்கி, தெள் உயிர், போயிற்று, அம்மா!

     மரியாளும் திருமகனுமாகிய இருவரும் இரு பக்கமும் தம் நல்லாசி
கூறி, அருள் கொண்ட சொல்லால் தேற்றவும், உருவத்தோடு வந்து
தோன்றிய வானவர் சூழ்ந்து நின்று, ஒலிக்கும் குழலிசையோடு தாமும்
வாயாற் பாடி, மணம் பிறக்கும் மலர்களைத் தூவி, வழி காட்டி அழைத்துத்
தாம் முன்னே செல்லவும், சூசையின் புண்ணியத் தெளிவு கொண்ட உயிர்
அத் திருவுடலை விட்டு நீங்கிப் போயிற்று, அம்மா!