பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 711

விது வளர் பத நல்லாளும், விண் வளர் அரசர் கோனும்,
பொது வளர் முறைமேல், அன்ன பூட்சியை, பேணி, வானோர்
சதுர் வளர் அணியின் சூழ்ந்து, தனி வளர் புகழ்ச்சி பாடி,
மது வளர் மலரைச் சிந்தி, மலர் வனத்து அடக்கினாரே.


     வளரும் பிறைமதி தாங்கிய திருவடி கொண்ட நல்லவளாகிய கன்னி
மரியும், விண்ணுலகில் தழைக்கும் அரசர்க்கரசனாகிய திரு மகனும்,
அவ்வுடலைப் பொதுவான முறைக்கு மேலாகப் பேணிக் காக்க, வானோர்
அழகு வளரும் அணியாகத் திரண்டு சூழ்ந்து, தனிச் சிறப்பு வளரும்
புகழ்ச்சிகளைப் பாடி, தேன் பெருகும் மலர்களைச் சொரிந்து, ஒரு
பூஞ்சோலைக் கல்லறையில் அடக்கம் செய்தனர்.

     'சதுர்' என்பது, எதுகை இன்னோசைப் பொருட்டு, 'சது' என நின்றது.

 
                    22
தூதுற வுயிர்போய் மீண்டு தோன்றள வுடலைப் பூவே
பாதுறக் காமி னென்னப் பரமனே பகர்ந்த வாசி
காதுற மகிழ்ந்த பூமி கைக்கொண்ட நன்றி மூடப்
போதுற விரித்த பைம்பூம் போர்வைமேற் போர்த்த தன்றே.
 

"தூது உற உயிர் போய், மீண்டு தோன்று அளவு உடலை, பூவே,
பாது உறக் காமின்" என்ன, பரமனே பகர்ந்த ஆசி,
காது உற மகிழ்ந்த பூமி, கைக் கொண்ட நன்றி மூட,
போது உற விரித்த பைம் பூம் போர்வை மேல் போர்த்தது, அன்றே.


     "தூது உரைக்கும் பொருட்டு இப்பொழுது உயிர் பிரிந்து போய்,
மீண்டும் உயிரோடு தோன்றும் வரை அவ்வுடலை, நிலமே, அழியாது
பாதுகாப்பாயாக" என்று ஆண்டவனாகிய திருமகனே கூறிய நல்லாசி, தன்
காதில் படவும் மகிழ்ந்த நிலம், தான் கைக்கொண்ட நன்மையை மூடி
மறைத்தாற் போல, அன்றே, அரும்புகள் நன்கு மலர்ந்த பசுமையான
பூக்களாகிய போர்வையை அக்கல்லறை மீது போர்த்தி மூடியது.

     'காமின்' என்றவிடத்துப் போல, பன்மை சுடடும் 'மின்' ஈற்று ஏவலை,
ஒருமை சுட்டுவதாகவும் கொள்வது முனிவர் மரபு.