பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 712

                   பாதலம் சேர்ந்த சூசை

     - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்

 
             23
மடல்க டிந்துந றாமது வாகையா
னுடல்க டிந்துட லங்கடிந் தோரிடை
கடல்க டிந்துக னிந்தசொற் கூறமெய்
யடல்க டிந்துதன் னாவியோ டெய்தினான்.
 
மடல் கடிந்து நறா மது வாகையான்,
உடல் கடிந்து, உடலம் கடிந்தோர் இடை,
கடல் கடிந்து கனிந்த சொல் கூற, மெய்
அடல் கடிந்து, தன் ஆவியோடு எய்தினான்.

     இதழ்களினின்று மணமுள்ள தேனைச் சொரியும் மலர்க் கொடியை
உடையவனாகிய சூசை, தன் உடலை நீக்கி, தன்னைப் போல் உடலை
நீக்கியவர் இருந்த பாதல உலகில், அமுதக் கடலிலும் இனிமையான கனிந்த
தூதுரை கூறும் பொருட்டு, தன் உடலினால் தடுக்கப்படுதலினின்று நீங்கி,
தன் ஆவியோடு சென்று சேர்ந்தான்.

 
             24
நிந்தை யாகுல நீத்தற நீர்மையாற்
றந்தை யாமிறை தாழ்விலா தாடொழு
தெந்தை யாற்கதி யெய்துப நம்பிய
முந்தை யாருறை முற்றரு ணாடதே.
 
நிந்தை ஆகுலம் நீத்து, அற நீர்மையால்,
தந்தை ஆம் இறை, தாழ்வு இலா, தாள், தொழுது,
எந்தையால் கதி எய்துப நம்பிய
முந்தையார் உறை, முற்று அருள் நாடு அதே


     நிந்தையும் துன்பமும் நீங்கி, தாம் செய்த புண்ணியங்களின்
தன்மையால், தந்தையாகிய ஆண்டவனின் அடியைத் தாழ்வில்லாமல்
நினைந்து இறைஞ்சி, நம் தந்தையின் அருளால் மோட்சம் அடைவதற்கு
நம்பியிருந்த முன்னோர் தங்கியிருப்பதும், ஆண்டவனின் முழு அருள்
கொண்டதுமாகிய நாடு அது.

     ஆண்டவனை முகமுகமாய்க் காணும் மோட்ச இன்பம் இல்லாத
குறை தவிர, அப்பாதலத்தார் வேறு எக்குறையும் இலர்.