பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 713

            25
மையி ழந்தும யக்கமி ழந்தவாப்
பொய்யி ழந்துபு ரைகளி ழந்துதோற்
பையி ழந்துறு பாடுமி ழந்தருண்
மெய்யி ழந்திலர் வேய்ந்துறை நாடதே.
 
மை இழந்து, மயக்கம் இழந்து, அவாப்
பொய் இழந்து, புரைகள் இழந்து, தோல்
பை இழந்து, உறு பாடும் இழந்து, அருள்
மெய் இழந்திலர் வேய்ந்து உறை நாடு அதே.

     இருளும் இழந்து, மயக்கமும் இழந்து, ஆசையால் வரும் பொய்யும்
இழந்து, பாவங்களும் இழந்து, தோலால் பொதிந்த பையாகிய உடலும்
இழந்து, அவ்வுடலால் வரும் துன்பங்களும் இழந்து, தெய்வ அருளையும்
உண்மையையும் இழக்காதவர் அழகோடு அமைந்து தங்கும் நாடு அது.

 
             26
காட்டு மாசைக ளிப்புற நாதனாங்
கீட்டு நன்றியி சைப்பது பாலதோ
பேட்டு வீடவர் பெற்றில ராயினும்
வீட்டு வாயிலெ னாமிளர் நாடதே.
 
காட்டும் ஆசை களிப்பு உற, நாதன் ஆங்கு
ஈட்டும் நன்றி இசைப்பது பாலதோ?
பேட்டு, வீடு அவர் பெற்றிலர் ஆயினும்,
வீட்டு வாயில் எனா மிளிர் நாடு அதே.

     தாம் தாம் கொள்ளும் ஆசைக்கு அளவாக அவரவர் பெரு மகிழ்ச்சி
அடையுமாறு, ஆண்டவன் அங்கு நிறைக்கும் நன்மையை எடுத்துக் கூறல்
இயலுவதோ? விரும்பி, மோட்ச வீட்டை அவர் இன்னும் பெற்றிலரேனும்,
மோட்ச வீட்டின் வாயில் போல விளங்கும் நாடு அதுவாகும்.

     'பெட்டு' என்பது, எதுகைப் பொருட்டு, 'பேட்டு' என நீட்டல்
விகாரமாயிற்று.