பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 714

               27
அன்ன நாட்டையன் னானடைந் தாங்குமீன்
மின்ன மீனர சுற்றிடை வேய்ந்தென
மன்ன மாதவ ரூடுவ யங்கினான்
சொன்ன மாமறை சூட்டுளத் தூயினான்.
 
அன்ன நாட்டை அன்னான் அடைந்து, ஆங்கு, மீன்
மின்ன மீன் அரசு உற்று இடை வேய்ந்து என
மன்ன, மா தவர் ஊடு வயங்கினான்,
சொன்ன மாமறை சூட்டு உளத் தூயினான்.

     தான் ஓதிய சிறந்த வேதத்தை அணியாகச் சூட்டிய மனத் தூய்மை
கொண்டவனாகிய சூசை, தானும் அத்தகைய நாட்டை அடைந்து, அங்கே,
விண்மீன்கள் மிளிர அவற்றிடையே விண்மீன்களின் அரசனாகிய மதி
தோன்றியது போல நிலைபெற, அப்பெருந் தவத்தோரிடையே விளங்கினான்.

 
               28
புக்க டைந்தபொ லிந்தவந் நாட்டிடை
மிக்க டைந்தந லோர்வியப் புற்றெழச்
சொக்க டைந்தவு ருக்கொடு தோன்றினா
னிக்க டைந்தவி ளந்துணர் வாகையான்.
 
புக்கு அடைந்த பொலிந்த அந் நாட்டிடை
மிக்கு அடைந்த நலோர் வியப்பு உற்று எழ,
சொக்கு அடைந்த உருக் கொடு தோன்றினான்,
இக்கு அடைந்த இளந் துணர் வாகையான்.

     தான் சென்று சேர்ந்த பொலிவுள்ள அந்நாட்டில் மிகுதியாகச்
சென்றடைந்திருந்த நல்லோர் வியப்போடு எழுச்சி கொள்ளுமாறு, தேன்
பொருந்திய இளம் பூங்கொத்தைக் கொடியாகக் கொண்டுள்ள சூசை, அழகு
அமைந்த உருவங்கொண்டு தோன்றினான்.

 
              29
மட்பு லந்தவிர் நாங்களி மாந்திடக்
கட்பு லந்தவிர் தன்கவின் காட்டவீங்
கெட்பு லந்தவிர் காந்தியோ டெய்திய
விட்பு லந்தவிர் விண்ணவ னோவென்பார்.