பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 716

     "அவ்வாண்டவன் உலகத்தை மீட்டுக் காத்த பின், தாய் போலும்
நிறைந்த அருளைக் கொண்டுள்ள தன்மையால், மேலே அமைந்துள்ள
மோட்ச வீட்டில் நம்மைக் கொண்டு சேர்க்கும் பொருட்டு, தூயவனாகிய
அவ்வாண்டவனே வந்தடைந்த தோற்றமோ இது?" என்பர்.

 
                32
ஐயந் தோன்றும னத்தயர் வற்றிடச்
சையந் தோற்றிய தோடவழ் தாரினான்
றுய்யந் தோடவிழ் பூங்கொடி சுட்டுபு
மையந் தோன்றியிவ் வாயுரை போக்கினான்.
 
ஐயம் தோன்று மனத்து அயர்வு அற்றிட,
சையம் தோற்றிய தோள் தவழ் தாரினான்.
துய் அம் தோடு அவிழ் பூங்கொடி சுட்டுபு,
மையம் தோன்றி, இவ் வாய் உரை போக்கினான் :

     இவ்வாறெல்லாம் ஐயம் தோன்றிய அப் பாதலத்தாரின் மனச்
சோர்வை அகற்றுமாறு, மலைபோல் தோன்றிய தன் தோள்களில் தவழும்
மாலையைக் கொண்டுள்ளவனாகிய சூசை, அவர் நடுவே வந்து நின்று,
தூய அழகிய இதழ்கள் விரிந்த தன் மலர்க் கொடியைச் சுட்டிக் காட்டி,
இவ்விதம் சொல்லலுற்றான் :

                     சூசை தூதுரை:

      - காய், - - காய், - - காய், - - காய்

 
                  33
வையத்தார் கசடழித்து வழுவின்றி மன்னுயிர்க
ளுய்யத்தான் மனுவாய வுயர்கடவு ளுமக்கின்பஞ்
செய்யத்தா னின்றிங்கண் செலுத்தியதோர் தூதடியே
னய்யத்தா னசையத்தா லயர்வுண்ட வறவோரே.
 
"வையத்தார் கசடு அழித்து, வழு இன்றி மன் உயிர்கள்
உய்ய, தான் மனு ஆய உயர் கடவுள், உமக்கு இன்பம்
செய்ய, தான் இன்று இங்கண் செலுத்தியது ஓர் தூது அடியேன்,
அய்யத்தால் நசை அத்தால் அயர்வு உண்ட அறவோரே!