பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 718

இன்னவற்கே தூது உற்றேன்; இந்நாள் உம் சிறை நீங்கி,
பின் அவற்கே வீட்டில் துணை பெரிது உவப்பீர், இனி" என்றான்


     "அவளுக்கே திருமணத்தின் மூலம் துணைவனாய் அமைந்து, அவள்
அவ்வாறு இனிதே பெற்றெடுத்த மன்னனுக்கே வளர்ப்புத் தந்தை ஆகும்
வரம் கொண்டவனாகி, இவ்வாண்டவனுக்கே தூதுவனாக அடியேன் இங்கு
வந்தடைந்தேன்; இனி, இந்நாளே உம் சிறை நீங்கி, பின் மோட்சத்தில்
அவனுக்கே துணைவராய் அமைந்து பெரிதும் மகிழ்வீர்" என்றான்.

     'இந் நாள்' என்றது, 'விரைவில்' என்ற பொருளில் நின்றது.

 
                      36
தேன்பொதுளுங் கனிதீஞ்சொற் றெளிபயன்கேட் டவனேந்துங்
கான்பொதுளு மலர்வாகை கண்டுண்ட நயம்பெருகி யூன்பொதுளுங்
குலத்திம்மாண் புண்டோவென் றுளம்வியப்ப வான்பொதுளும்
வரத்தோனை வணங்கின்றா ரொருங்கன்னார்.
 
தேன் பொதுளும் கனி தீம் சொல் தெளி பயன் கேட்டு, அவன் ஏந்தும்
கான் பொதுளும் மலர் வாகை கண்டு, உண்ட நயம் பெருகி,
'ஊன் பொதுளும் குலத்து இம் மாண்பு உண்டோ.' என்று உளம் வியப்ப,
வான் பொதுளும் வரத்தோனை வணங்கின்றார் ஒருங்கு அன்னார்:

     தேன் நிறைந்த கனி போன்ற இனிய சொல்லின் தெளிந்த பயனைக்
கேட்டறிந்தும், அவன் ஏந்தும் மணம் நிறைந்த மலர்க் கொடியைக் கண்டும்,
தாம் கொண்ட இன்பம் பெருகி, 'ஊனால் நிறைந்த மனிதக் குலத்திற்கு
இத்தகைய மாண்பும் அமைவதுண்டோ!' என்று உள்ளம் வியந்து, வானில்
நிறைந்துள்ள வரங்களைக் கொண்டவனாகிய சூசையை அவர் அனைவரும்
ஒருங்கே வணங்கி, இவ்வாறு கூறுகின்றனர் :

     'வணங்குகின்றார்' என்பது, இடைக்குறையாய், 'வணங்கின்றார்' என
நின்றது. ஆண்டவனைத் தாயாகப் பெற்றெடுத்தலும், கைத்தாதையாக
வளர்த்தலும் மனிதர்க்கு வாய்த்தல் வியப்பிற்குரிய மாண்பாயிற்று.