பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 720

ஏந்தியுள்ளாயே! பேணி வளர்த்துள்ளாயே! மீட்பின் உண்மையைத் தக்க
காலத்தில் தெளிவித்த வானரசனாகிய அத்திருமகனின் தன்மையை
எங்களுக்கு எடுத்துச் சொல்வாய்" என்றனர்.

 
                   39
கோட்பதருங் குணத்திறையோன் குணக்கொளிபோ
                               னிலத்துதித்து
வேட்பதருந் தயைபுரிந்து விளங்குநிலை யாதென்னக்
கேட்பதரும் வினைகேட்டீர் கெழுந்தவரே யென்றான்பின்
மீட்பதருஞ் சொற்றொடுத்தான் விம்மிதக்கற் புளத்தூயான்.
 
"கோட்பது அருங் குணத்து இறையோன், குணக்கு ஒளி போல் நிலத்து
                                        உதித்து,
வேட்பது அருந்தயை புரிந்து விளங்கு நிலை யாது என்ன,
கேட்பது அரும் வினை கேட்டீர், கெழுந்தவரே!" என்றான்; பின்,
மீட்பது அருஞ் சொல் கொடுத்தான், விம்மிதக் கற்பு உளத் தூயான்.

     வியப்புக்குரிய கற்புப் பண்பால் உள்ளம் தூயவனாகிய சூசை,
அவர்களை நோக்கி, "நிறைந்த தவத்தோரே, கோணுதல் இல்லாத குணங்களைக்
கொண்ட ஆண்டவன், கிழக்கே தோன்றும் பகலவன் ஒளி
போல் இவ்வுலகில் வந்து தோன்றி, விருப்பிற்கும் மேம்பட்ட அரிய தயவை
மக்களுக்குப் புரிந்து விளங்கும் நிலை யாது என்று, கேட்பதற்கே அரிய
செயலை எடுத்துக் கூறுமாறு என்னைக் கேட்டீரே!" என்றான்; பின்,
மீண்டும் அரிய சொல்லால் இவ்வாறு தொடுத்துக் கூறினான் :

 
                   40
நோயொக்கு மவர்க்கின்ப நுனித்தவுயிர் மருந்தொக்குந்
தீயொக்கும் புரையார்க்கே சீதமொக்கும் புயலொக்கும்
வீயொக்கும் வடிவத்தால் வியன்றயையாற் கடலொக்குந்
தாயொக்குந் தாதையொக்குஞ் சகத்தெங்கு மத்திருவோன்.
 
"நோய் ஒக்கும் அவர்க்கு இன்பம் நுனித்த உயிர் மருந்து ஒக்கும்;
தீ ஒக்கும் புரையார்க்கே சீதம் ஒக்கும் புயல் ஒக்கும்;
வீ ஒக்கும் வடிவத்தால்; வியன் தயையால் கடல் ஒக்கும்;
தாய் ஒக்கும், தாதை ஒக்கும், சகத்து எங்கும், அத் திருவோன்.