பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 722

"தீது ஒருங்கு மலிபு அறியா, திளை அருள் ஆர் நெஞ்சத்தான்;
கோது ஒருங்கும் குறை ஒருங்கும் குறைத்து ஒழிக்கும் புயல் கரத்தான்;
நீது ஒருங்கும் தோற்றுவிக்கும் நெறி வழுவா அறப் பதத்தான்;
வாது ஒருங்கும் சிதைத்து அலகை வெல் நாம வயவேலான்.


     "அவன் தீமை முற்றிலும் தன்னிடம் பொருந்துதல் அறியாதவனாய்,
திரண்ட அருளே நிறைந்த நெஞ்சம் படைத்தவன். நாட்டின் குற்றங்களையும்
குறைகளையும் ஒருங்கே குறைத்து நீக்கும், மேகம் போன்ற அருட் கைகளை
உடையவன்; நீதியை எங்கும் ஒருங்கே தோற்றுவிக்கும், நெறி தவறாத அறம்
வாய்ந்த அடிகளை உடையவன்; வஞ்சனைகளை எங்கும் ஒருங்கே
சிதைத்துப் பேய்களை வெல்லும் அஞ்சத் தக்க வலிமை வாய்ந்த வேலை
உடையவன்.

 
                    43
அருள்விஞ்சிப் பகைவெள்ள மறக்கடந்தான் மறையோதுந்
தெருள்விஞ்சிச் செயிர்ப்புகையா றேக்கியதீ திருட்கடந்தான்
பொருள்விஞ்சிப் பொங்குபுரைப் புணரியிரந் தவன்கடந்தான்
மருள்விஞ்சிப் பெருகுநசை மழுக்கடந்தான் றவமிக்கான்
 
"அருள் விஞ்சி, பகை வெள்ளம் அறக் கடந்தான்; மறை ஓதும்
தெருள் விஞ்சி, செயிர்ப் புகையால் தேக்கிய தீது இருள் கடந்தான்;
பொருள் விஞ்சிப் பொங்கு புரைப் புணரி, இரந்து அவன் கடந்தான்.
மருள் விஞ்சிப் பெருகு நசை மடுக் கடந்தான் தவம் மிக்கான்;

     "தான் அருளில் மேலோங்கி நின்று, பகை வெள்ளத்தை முற்றிலும்
கடந்தான்; வேதத்தை எடுத்து ஓதும் தெளிவில் மேலோங்கி நின்று,
பாவமென்னும் புகையால் செறிந்து கிடந்த தீமையாகிய இருளைக் கடந்தான்;
செல்வ மிகுதியால் பொங்கும் பாவமாகிய கடலை, தான் இரந்தும்
வாழ்ந்ததன் மூலம் அவன் கடந்தான்; தவத்தில் மிக்கவனாகி, மயக்கம்
மேலோங்குவதனால் பெருகும் ஆசையென்னும் கடலைக் கடந்தான்.