பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 723

                  44
என்னுரைப்ப தினியானே யெந்தைமனு வாயுளிநீர்
முன்னுரைப்ப வெடுத்தநிலை முற்றொழித்தான் கடந்தென்றாற்
பின்னுரைப்ப தெவனுண்டோ பெருந்தவரே யென்றான்சூழ்
மின்னுரைப்ப வொளியெறிக்கு மெய்ச்சுருதி விளக்கன்னான்.
 

"என் உரைப்பது இனி யானே? எந்தை மனு ஆய் உளி, நீர்
முன் உரைப்ப எடுத்த நிலை முற்று ஒழித்தான் கடந்து என்றால்,
பின் உரைப்பது எவன் உண்டோ, பெருந் தவரே?" என்றான், சூழ்
மின் உரைப்ப ஒளி எறிக்கும், மெய்ச் சுருதி விளக்கு அன்னான்.


     "மிக்க தவத்தோரே, இன்னும் நான் என்ன சொல்வது? நம்
தந்தையாகிய ஆண்டவன் மனிதனாக அவதரித்து வந்தவிடத்து, நீங்கள்
முன்னே சொல்லவென்று முனைந்த அந்த நிலைகளையெல்லாம் முற்றிலும்
கடந்து ஒழித்துவிட்டானென்றால், மேலும் சொல்ல வேண்டியது ஏதேனும்
உண்டோ?" என்று, தன்னைச் சுற்றிலும் மின்னல் போன்று ஒளி வீசும்
மெய்யான வேதத்திற்கு விளக்குப் போன்றவனாகிய சூசை கூறினான்.

                 அன்னமைக்குச் சூசை கூறியது

     - விளம், - மா, - விளம், - மா, - விளம், - விளம், - மா

 
              45
பேர்நல மணிக்குன் றுச்சியிற் பெயர்ந்து
     பெருகிவீழ் வெள்ளமொத் தன்னான்
சீர்நலத் துரைத்த திவ்விய மதுர
     சீரிய தேனுரை கேட்டாங்
கார்நல தவத்தோர் களிப்புறி நிற்ப
     வன்புமிக் கென்மக ளீன்ற
வேர்நல புதல்வற் குற்றவை யறைதி
     யென்றன ளன்னமை யென்பாள்.