|
மலர்களால்
அமைந்த கொடியைக் கொண்ட சூசை இவ்வுரையைக்
கேட்டு, ஆசை கொண்ட அத்தாய் மகிழுமாறும், மற்றும் அங்குள்ள
அனைவரும் மகிழுமாறும், கன்னிமை என்னும் மொட்டு விரியாமலே
அழகிய கனி அதினின்று கனிந்தாற்போல், மரியாள், புனைந்துரைப்பதற்கரிய
கன்னியாய் இருந்தே ஒரு வரத்தினால் தாய்மையோடு பொருந்துமாறு,
புகழ்வதற்கரிய தெய்வக் கருப்பம் கொண்டதும், அதனால் தீங்கு
நேர்வதற்கான ஐயத்திற்குத் தான் ஆளாகிய விதமும், பின் அதனை விட்டுத்
தான் தெளிந்த விதமுமெல்லாம் ஒருங்கே எடுத்துக் கூறினான்.
| 47 |
ஆவல
ருறவோ ரகற்றலில் வெளிமேய்ந்
தாவடை
குகத்திடத் திறைவன்
காவலர்
தன்மைத் தமரர்சூழ் நிற்பக்
கங்குலிற்
பிறந்தன வாறுங்
கோவலர் காணக் குழீஇயின வாறுங்
கோக்கண
மிறைஞ்சிய வாறும்
பாவலர் வாழ்த்திப் பலர்பழித் தங்கண்
பழிபகை முற்றிய வாறும். |
| |
ஆவலர் உறவோர்
அகற்றலில், வெளி மேய்ந்து ஆ அடை குகத்து இடத்து,
இறைவன்,
காவலர் தன்மைத்து அமரர் சூழ் நிற்ப, கங்குலில் பிறந்தன வாறும்,
கோவலர் காணக் குழீஇயின வாறும், கோகணம் இறைஞ்சிய வாறும்,
பாவலர் வாழ்த்தி, பலர் பழித்து, அங்கண் பழிபகை முற்றிய வாறும், |
நண்பரும்
உறவினரும் இடந்தராது அகற்றியமையால், பசுக்கள்
வெளியே மேய்ந்து வந்து அடையும் குகையில், காவற் சேவகர்போல்
வானவர் சூழ்ந்து நிற்க, ஆண்டவன் இரவில் அங்குப் பிறந்த விதமும்,
இடையார் அம்மகனைக் காண வந்து திரண்ட விதமும், அரச இனத்தார்
வந்து வணங்கிய விதமும், புலவர் சிலர் அவனை வாழ்த்தவும், பலர்
பழிக்கவுமாக, அங்கே பழியும் பகையும் முற்றிய விதமும்,
இப்பாடல்,
பின்வரும் இரு பாடல்களோடு குளகமாய்ப் பொருள்
தொடர்ந்து, 'உரைத்தான்' என்பதோடு முடிவு பெறும்.
|