பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 73

சூனலஞ் சினைகொள் கன்னி
     துளங்கருள் புரித லுள்ளி
வானலஞ் சிவணிச் சூற்கொள்
     மைமையை யணுக லோர்ந்தாள்.
 
பான் நலம் சினைகொள் மேகம் பகல் செய விளங்காது என்னோ?
தேன் நலம் சினை கொள் பைம் பூ தேம் கமழாதோ? தேவ
சூல் நலம் சினை கொள் கன்னி துளங்கு அருள் புரிதல் உள்ளி,
வான் நலம் சிவணிச் சூல் கொள் மைமையை அணுகல் ஓர்ந்தாள்.

      பகலவனை நல்ல கருவாக உள்ளே கொண்டுள்ள மேகம்
அவ்வொளியைப் புறத்தே தந்து விளங்காதிருப்பது எவ்வாறு? தேனை
நல்ல கருவாக உள்ளே கொண்டுள்ள பசுமையான பூ அத்தேன் மணத்தைப்
புறத்தே கமழ விடாதோ? அவ்வாறே தெய்வக் கருப்பத்தைத் தன்னுள்
நல்ல கருவாகக் கொண்டுள்ள கன்னி மரியாள் தன்னுள் விளங்கும் அருளை
அக்குழந்தைக்கு வழங்கக் கருதினாள்; அதற்கென்று வானுலக நலம்
பொருந்திக் கருப்பம் தாங்கியுள்ள மலடியை அணுகிப் போக நினைத்தாள்.

      மேகம் பகலவன் ஒளியையும், பூ இதழ்கள் தேனின் மணத்தையும்
மறைக்காது வெளிப்படுத்தல் போல, மரியாள் வயிற்றுள் அடங்கியிருக்கும்
இக்குழந்தை நாதனும் தன் அருளை அக்குழந்தை பால் எளிதிற் பொழிவான்
என்பது கருத்து. 'பானு' என்ற வடசொல் இறுதி குறைந்து நின்றது.

 
            14
ஓர்ந்தவை யறத்தி னாட்சிக்
     குரித்துணை யவற்குங் கூறத்
தேர்ந்தவை யுயர்ந்த கேள்வி
     செறிந்தருட் புலமை கேள்வி
கூர்ந்தவை யிமிழிற் கேட்டுக்
     குணமிதென் றிருவர் வானத்
தார்ந்தவை சூழ நீண்ட
     வதர்கடந் தேக லுற்றார்.