பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 74

ஓர்ந்தவை அறத்தின் ஆட்சிக்கு உரித் துணையவற்கும் கூற,
தேர்ந்தவை உயர்ந்த கேள்வி செறிந்து அருட் புலமையோனும்
கூர்ந்து அவை இமிழின் கேட்டு, ''குணம் இது'' என்று, இருவர் வானத்து
ஆர்ந்து அவை சூழ, நீண்ட அதர் கடந்து ஏகல் உற்றார்.


      மரியாள் தான் நினைத்தவற்றை, அற வாழ்வுக்கு உரிய
துணைவனான சூசைக்கும் கூறினாள். நல்லவையெனத் தேர்ந்த நூல்களில்
உயர்ந்த கேள்வியறிவு நிறைந்து அருளறத்திலும் புலமை பெற்றவனாகிய
சூசையும் அவற்றை இனிமையாய்க் கூர்ந்து கேட்டான்; ''இது நலம்''
என்றான். எனவே, வானவர் கூட்டம் தமக்குத் துணையாக நிறைந்து சூழ,
இருவரும் நீண்ட வழி கடந்து யூதாநகருக்குச் செல்லத் தொடங்கினர்.

                  யூதாநகர்ப் பயணம்

 
                15
தேசிகப் பாவையிற் சிறந்த கோதையாள்
மாசிகற் பானொளி கமல மாந்தல்போ
லாசிகற் சூலணிந் தல்கல் நான்குமா
யேசிகற் பாயொளி பரப்ப வேகினார்.
 
தேசிகப் பாவையின் சிறந்த கோதையாள்
மாசு இகல் பான் ஒளி கமலம் மாந்தல் போல்,
ஆசு இகல் சூல் அணிந்து அல்கல் நான்கும் ஆய்,
ஏசு இகல் பாய் ஒளி பரப்ப ஏகினார்.

      மரியாள் பொன்னாற் செய்த பாவையைக் காட்டிலும் அழகிற் சிறந்த
பெண் ஆவாள். இருளின் பகையாகிய கதிரவனின் ஒளியைத் தாமரை
ஏற்பதுபோல், அவள் பாவத்திற்குப் பகையாகிய ஆண்டவனைக் கருப்பம்
தாங்கினாள். அது நிகழ்ந்து நான்கு நாட்கள் ஆகியபோது, குற்றத்திற்குப்
பகையாகப் பாயும் ஞான ஒளியைப் பரப்புமாறு சூசையும் மரியாளும்
யூதாநகர் நோக்கிச் சென்றனர்.

      கோதை - மாலை, கோதையாள் - மாலையை அணிந்தவள்,
அல்லது, மாலை போன்றவள்; இங்கே வெறுமனே 'பெண்' என்னும்
பொருளில் நின்றது.