பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 75

             16
ஆரண வடிவினோ னரிய சூலெனுங்
காரண மறிகிலா கருத்தி லோங்கிய
பூரண வருளினாற் பொலிந்தின் பாரலை
வாரண நீந்தியுண் மகிழ வேகினார்.
 
ஆரண வடிவினோன் அரிய சூல் எனும்
காரணம் அறிகிலா, கருத்தில் ஓங்கிய
பூரண அருளினால் பொலிந்து, இன்பு ஆர் அலை
வாரணம் நீந்தி உள் மகிழ ஏகினார்.

      வேத வடிவாக விளங்கிய சூசை இனந் தெரியாத இன்பத்தில்
ஆழ்ந்தான். அதற்குக் காரணம் தன் துணைவி தாங்கிய அரிய கருப்பம்
என்று அறியான். அதனை அறியாமலே, தன் உள்ளத்திற் பொங்கிய நிறை
அருளினாற் பொலிவு பெற்றான்; இன்ப அலைகள் நிறைந்த கடலில் நீந்தி
உள்ளம் மகிழ்ந்தான். அவ்வாறு மகிழ்ந்த வண்ணம் இருவரும் சென்றனர்.

     அறிகிலா - அறிகிலாது என்ற வினையெச்சம் ஈறு கெட்டு நின்றது.

 
                 17
கயிற்றுணை படலையங் கலனிற் சேர்ந்திவர்
குயிற்றுணை குயிலுமின் னிசையிற் கூத்தெழ
மயிற்றுணை யாடிய பொழில்வ ளைத்தநீ
ளெயிற்றுணை யுயர் நக ரகல வேகினார்.
 
கயில் துணை படலை அம் கலனின் சேர்ந்து இவர்
குயில் துணை குயிலும் இன்னிசையின் கூத்து எழ
மயில் துணை ஆடிய பொழில் வளைத்த நீள்
எயில் துணை உயர் நகர் அகல் ஏகினார்.

      குயில் தன் துணைக் குயிலோடு பாடும் இன்னிசைக்கு ஏற்பக் கூத்து
முறையில் மயில் தன் துணை மயிலோடு ஆடிய சோலை சூழ்ந்த நெடிய
மதில் பாதுகாப்பாக நசரேத்து நகரில் உயர்ந்து நின்றது. இவ்விருவரும்
அந்நகரை அகன்று, பூட்டுவாயிற் பொருத்திய இரட்டை வட அணிகலன்
போல் இணை பிரியாது சேர்ந்து சென்றனர்.