பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 739

               8
மருள்வரு நசைபிறர் பொருளில் வைத்திடா
தருள்வரு முகத்திறன் பொருள ளித்தலே
பொருள்வரும் வழியெனப் புயலின் வான்கொடை
தெருள்வரு மறிவுளார் திருத்து வாரென்பான்.
 
"மருள் வரும் நசை பிறர் பொருளில் வைத்திடாது,
அருள் வரும் முகத்தில் தன் பொருள் அளித்தலே
பொருள் வரும் வழி என, புயலின் வான் கொடை,
தெருள் வரும் அறிவு உளார், திருத்துவார்" என்பான்.

     "பிறர் பொருளின்மீது மயக்கத்தைத் தரும் ஆசை வையாமல், கருணை
பொருந்திய முகத்தோடு தன் பொருளைப் பிறருக்கு ஈதலே தனக்குப்
பொருள் சேரும் வழியாகுமென்று கொண்டு, தெளிவு பொருந்தி, அறிவு
படைத்தோர், மேகம் போன்று சிறந்த கொடையைத் திருந்தச் செய்வர்"
என்றும் சொல்லுவான்.

 
                           9
அறத்தினால் வருவதே யின்ப மல்லதோர்
மறத்தினால் வசைவரு மன்றி வானெறிப்
புறத்தினா மென்றுதான் புகன்ற வேதநூற்
றிறத்தினா லுளத்திருள் சிதைப்ப வோதுவான்.
 
"அறத்தினால் வருவதே இன்பம் அல்லது, ஓர்
மறத்தினால் வசை வரும் அன்றி, வான் நெறிப்
புறத்தின் ஆம்" என்று, தான் புகன்ற வேத நூல்
திறத்தினால், உளத்து இருள் சிதைப்ப ஓதுவான்.

     "புண்ணியத்தினால் வருவதே இன்பமாகு மல்லாமல், யாதொரு
பாவத்தினாலும் தனக்கு இகழ்ச்சி வருவதுமன்றி, வானுலகம் சேரும் வழிக்குப்
புறத்தே தன்னைக் கொண்டு சேர்க்கும்" என்று, தான் எடுத்துக் கூறிய வேத
நூலின் திறத்தினால், மக்கள் உள்ளத்திலுள்ள அறியாமை என்னும் இருளைச்
சிதைக்கும் விதமாய்ப் பேசுவான்.

     "அறத்தான் வருவதே இன்பம்" திருக்குறள் 39.