பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 741

                   12
வென்றியுங் குணித்தனன் வென்றி வாளொடு
பின்றையு முளபல பெரும்ப டைக்கல
மின்றியும் பொறுத்தலோ டிகல்வெல் லப்பொறை
யொன்றையுந் தாங்கினா னுலகந் தாங்கினான்.
 
வென்றியும் குணித்தனன்; வென்றி வாளொடு
பின்றையும் உள பல பெரும் படைக்கலம்
இன்றியும், பொறுத்தலோடு இகல் வெல்ல, பொறை
ஒன்றையும் தாங்கினான், உலகம் தாங்கினான்.


     உலகங்களையெல்லாம் தாங்கிக் கொண்டிருப்பவனாகிய அத்
திருமகன், தனக்கு வெற்றியையே கருதினான்; ஆயினும், வெற்றி
தருவதற்குரிய வாளோடு பின்னுமுள்ள பல பெரிய போர்க் கருவிகள்
இல்லாமலே, பொறுப்பதன் மூலம் பகையை வெல்வதற்குப் பொறுமை
ஒன்றையே கருவியாகத் தாங்கியுள்ளான்.

 
                      13
தீய்வரு மிகழ்ச்சியைச் சிந்தி யாப்பிரான்
றாய்வரு மருளினாற் றரணி யெங்கணும்
போய்வருந் துயரறப் புதுமை யாக்கியுட்
காய்வருங் குளிர்ப்பவே கருணை காட்டுவான்.
 
தீய் வரும் இகழ்ச்சியைச் சிந்தியாப் பிரான்,
தாய் வரும் அருளினால், தரணி எங்கணும்
போய், வரும் துயர் அறப் புதுமை ஆக்கி, உள்
காய் வரும் குளிர்ப்பவே கருணை காட்டுவான்.

     நெருப்புப் போல் தனக்கு வரும் இகழ்ச்சியையும் சிந்தியாத
அவ்வாண்டவன், தாய்க்குரிய கருணையால், உலகமெங்கும் சுற்றித் திரிந்து,
மக்களுக்கு வரும் துயரம் நீங்குமாறு புதுமைகள் புரிந்து, பகையால் உள்ளம்
கொதிப்பவரும் குளிர்ச்சியடையுமாறு தன் கருணையைக் காட்டுவான்.

 
                      14
கண்டருங் கரந்தருஞ் செல்லக் காறரு
முண்டருங் களிதரு முயிர்த ருந்தகும்
பண்டருந் துயர்கணோய் பலவை தீர்தரு
மண்டருந் தயைநலம் வழங்கத் தந்துளான்.