பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 744

பேயை வெல்லவும், நீதியை முன்னிட்டு எரிந்த உனது சினத்தை நீக்கவும்,
எதனைத் தந்து செய்து முடிப்பேன்?', என்று தன் தந்தையாகிய கடவுளை
வேண்டினான்.

 
                           19
முற்பழி யொழித்துநின் முனிவை மாற்றிடத்
தற்பழி யிலாப்பலி தரணி மீதிலா
தற்பழி விலாதவென் னுயிர ளித்தியான்
றொற்பழி பிதாவிதோ துடைக்கு வேனென்றான்.
 
"முன் பழி ஒழித்து நின் முனிவை மாற்றிட,
தன் பழி இலாப் பலி தரணி மீது இலாது,
அற்பு அழிவு இலாத என் உயிர் அளித்து, யான்
தொல் பழி, பிதா, இதோ துடைக்குவேன்!" என்றான்.

     "தந்தையே, முன்னே ஆதிப் பெற்றோர் செய்த பாவப் பழியைப்
போக்கி உன் சினத்தைத் தீர்க்கும் பொருட்டு, தன்னிடத்துக் குறை ஒன்றும்
இல்லாத பலி இவ்வுலகில் இல்லாமையால், தன்னிடத்துச் சிறிதும் குறை
இல்லாத எனது உயிரையே தந்து, அந்தப் பழைய பாவப் பழியை
இப்பொழுதே நான் போக்குவேன்" என்றான்.

                    மீட்புத் திட்டம்

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

 
                      20
என்றனன் கடனீர் வெள்ளத் திணைகடந் தரிய வன்பா
னன்றெனப் பிதாவு மென்றா னரதுவத் திறைமை சேர்த்தி
நின்றன நாய்கன் செந்நீர் நீத்தமாய்ச் சிந்தித் தானே
சென்றன வுலகின் மாசு தீர்த்தறக் கழுவ னேர்ந்தான்.