பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 745

என்றனன், கடல்நீர் வெள்ளத்து இணைகடந்து அரிய அன்பான்
"நன்று" எனப் பிதாவும் என்றான். நரதுவத்து இறைமை சேர்த்தி
நின்றன நாய்கன், செந்நீர் நீத்தமாய்ச் சிந்தி, தானே
சென்று, அன உலகின் மாசு தீர்த்து அறக் கழுவல் நேர்ந்தான்.


     கடல்நீர்ப் பெருக்கின் ஒப்புமையையும் கடந்து நின்ற அரிய அன்புடைய
திருமகன் இவ்வாறு சொன்னான். தந்தையாகிய கடவுளும், "அது
நல்லது" என்று ஏற்றுச் சொன்னான். மனித இயல்போடு தெய்வ இயல்பையும்
சேர்த்து அவதரித்து நின்ற ஆண்டவன், தானே மனம் ஒருமித்துச் சென்று,
தனது குருதியை வெள்ளமாய்ச் சிந்தி, அத்தகைய உலகத்தின் பாவ
மாசுகளை அறவே தீர்த்துக் கழுவத் திருவுளங் கொண்டான்.

 
                     21
கலையினா வளக்க லாற்றாக் கசடெலா மொருங்கு தீர்ப்பக்
கொலையினா லுயிரைச் சிந்தா கூறுமோ ருரைசால் பேனும்
விலையினா லுயர்வான் வீட்டு விழுப்பமே யெவர்க்குங் காட்ட
வலையினா லுவமி யாத வலக்கணுற் றிறத்த னேர்ந்தான்.
 
கலையினால் அளக்கல் ஆற்றாக் கசடு எலாம் ஒருங்கு தீர்ப்ப,
கொலையினால் உயிரைச் சிந்தா, கூறும் ஓர் உரை சால்பேனும்,
விலையினால் உயர்வான் வீட்டு விழுப்பமே எவர்க்கும் காட்ட,
அலையினால் உவமியாத அலக்கண் உற்று இறத்தல் நேர்ந்தான்.

     கலைகளாலும் அளக்க இயலாத பாவ மாசுகளையெல்லாம் முழுவதும்
நீக்குவதற்கு, கொலையினால் தன் உயிரை இழக்காமலே, தான சொல்லும்
ஒரு வார்த்தையே போதுமாயினும், விலையால் உயர்ந்த மோட்ச வீட்டின்
மேன்மையை யாவர்க்கும் காட்டும் நோக்கத்தோடு, கடலானும் ஒப்புமை
அமையாத துன்பங்களைத் தானே அனுபவித்து இறக்கத் திருவுளங்
கொண்டான்.

 
                    22
இத்திறத் திறைவ னேர்ந்த வியல்பிதென் றறிந்த பேய்கள்
மைத்திறத் துடன்ற வஞ்ச மறப்பகை யிவன்மே றீயோர்
கைத்திறத் தியற்ற லுள்ளிக் காய்தழல் தூண்டி னாற்போ
லத்திறத் தினரை யேவி யரும்பகை முற்றிற் றன்றோ.