பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 747

கடு மரத்து இழிந்த நஞ்சு உள் கடுத்து அடும் வினையைக் காக்க,
நெடு மரத்து இழிந்த தேவ நிலை மருந்து உரியது என்ன,
வடு மரக் கனியால் மாக்கட்கு அமைந்த தொல் பழியை, எந்தை,
கொடு மரத்து அறைவுண்டு, எம்மைக் குணித்து, இறந்து ஒருங்கு
                                        தீர்த்தான்.


     நச்சு மரத்தினின்று இறங்கிய நஞ்சு உள்ளே போய் மிகுந்து
கொல்லும் செயலைத் தடுத்துக் காக்க, மற்றொரு நெடிய மரத்தினின்று
இறங்கிய தெய்வத் தன்மை கொண்ட மருந்து தகுந்ததாய் அமைவது போல,
குற்றமுள்ளதென்று விலக்கப்பட்ட மரத்தின் கனியால் மக்களுக்கு ஆதிப்
பெற்றோரால் உண்டான பழைய பாவப் பழியை, நம் தந்தையாகிய
ஆண்டவன், நம்மைக் கருதி, ஒரு கொடிய சிலுவை மரத்தில் அறையுண்டு
இறந்து ஒருங்கே தீர்த்துக் காத்தான்.

     'மருந்து' அமுதம் என்றும் கொள்ளலாம்.

 
                        25
மக்கடங் கடன்க டீர்ப்ப வயமிலா ரென்ன நாதன்
றிக்கடங் கலுமுட் கூசத் திளைத்தவக் கடன்மேற் போட்டு
மிக்கடங் கிலவன் பாற்றான் மெய்யொடு மகனா யிங்கன்
புக்கடங் கிலநோ யிவ்வாய்ப் பொறுத்தெமை யுள்ளி
மாய்ந்தான்.
 
மக்கள் தம் கடன்கள் தீர்ப்ப வயம் இலார் என்ன, நாதன்,
திக்கு அடங்கலும் உள் கூசத் திளைத்த அக்கடன், மேல் போட்டு,
மிக்கு அடங்கு இல அன்பால் தான் மெய்யொடு மகனாய் இங்கண்
புக்கு, அடங்கு இல நோய் இவ் வாய்ப் பொறுத்து, எமை உள்ளி
                                             மாய்ந்தான்.

     மனிதர் தாமாகவே தம் பாவக்கடன்களைத் தீர்த்துக் கொள்ளும்
ஆற்றல் அற்றவரென்ற காரணத்தால், திசைகள் அனைத்தும் உள்ளே
கூசுமாறு பெருகி நின்ற அக்கடன்களை ஆண்டவனே தன்மீது சுமத்திக்
கொண்டு, அடங்காது பெருகும் அன்பினால் தான் உடலெடுத்து மனிதனாய்
இவ்வுலகை வந்தடைந்து, எண்ணிலடங்காத துன்பங்களை இவ்வுலகில்
தானே அனுபவித்து, இறுதியில், நம்மை நினைந்து உயிரையும் தந்தான்.