பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 748

                          26
எஞ்சிறை யொழித்துத் தான்றன் னின்னுயிர் தந்தி யாக்கை
யஞ்சிறை யொழித்து வாய்ந்த வாவியான் முந்தை யோர்க
டஞ்சிறை யொழித்து வீட்டின் வளந்தர வருளோர்ந் தாசை
விஞ்சிறை யவன்றன் றூது விளம்பிய நிலையிற் போனான்.
 
எம்சிறை ஒழித்து, தான் தன் இன் உயிர் தந்து, யாக்கை
அம்சிறை ஒழித்து, வாய்ந்த ஆவியால், முந்தையோர்கள்
தம்சிறை ஒழித்து வீட்டின் வளம் தர அருள் ஓர்ந்து, ஆசை
விஞ்சு இறையவன், தன் தூது விளம்பிய நிலையின் போனான்.

     மக்கள்மேல் ஆசை மிஞ்சிய ஆண்டவன், தானே தனது இனிய
உயிரை அளித்து, நம் பாவச்சிறையை நீக்கி, தன் உடலாகிய அழகிய
சிறையை விட்டு, பொருந்திய தன் ஆவியோடு சென்று,
புண்ணியவான்களாகிய முன்னோர்தம் பாதலச் சிறையை ஒழித்து மோட்ச
வீட்டின் வளத்தை அவர்களுக்குத் தர அருளோடு நினைவு கூர்ந்து, தன்
தூதுச் செய்தியை அவர்களுக்கு எடுத்துக் கூறும் தன்மையாக அங்குச் சென்றான்.

                 பாதலத்தோர் வாழ்த்து

     - விளங்காய், கூவிளங்காய், கூவிளங்காய், தேமா

 
                         27
பானலமொ ழித்தமரர் பாவிசைகள் பாடத்
தேனலமொ ழித்தபெரு மின்பமுனர் செல்ல
மீனலமொ ழித்திரவி யெஞ்சவொளி விஞ்சக்
கானலமொ ழித்தவிறை யோன்கடித டைந்தான்.
 
பால்நலம் ஒழித்து அமரர் பா இசைகள் பாட,
தேன்நலம் ஒழித்த பெரும் இன்பம் முனர் செல்ல,
மீன்நலம் ஒழித்து இரவி எஞ்ச ஒளி விஞ்ச,
கால்நலம் ஒழித்த இறையோன் கடிது அடைந்தான்.

     பாலின் இனிமையை வென்று ஒழித்த தன்மையாய் வானவர் இசைப்
பாடல்களைப் பாடவும், தேனின் சுவையை விஞ்சிய பேரின்பம் தனக்கு
முன்னே செல்லவும், விண்மீன்களின் ஒளியினும் மேலாக, பகலவனும்
குறைபடுமாறு தன் ஒளி மேலோங்கி நிற்கவும், காற்றின் விரைவையும் தன்
வேகத்தால் வென்ற ஆண்டவன் அங்கு விரைந்து சென்றடைந்தான்.