பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 751

                   சூசையின் மகிழ்ச்சி

 
               32
ஓசைவரு நீத்தமொடு நீர்புரள்வ தொப்பச்
சூசைவரு நாதனொளி தோன்றலில டங்கா
வாசைவரு மார்வநிலை யாயருள்வ ழிந்த
பூசைவரு மாபுகழ் புரிந்துபுக லுற்றான்
 
ஓசை வரு நீத்தமொடு நீர் புரள்வது ஒப்ப,
சூசை, வருநாதன் ஒளி தோன்றலில், அடங்கா
ஆசைவரும் ஆர்வம் நிலையாய், அருள் வழிந்த
பூசை வரும் மா புகழ் புரிந்து புகல் உற்றான்.

     சூசை, அங்கு வந்து சேர்ந்த ஆண்டவனின் ஒளி தனக்குத்
தோன்றியதும், ஓசையோடு பாய்ந்துவரும் வெள்ளத்தோடு ஆற்று நீர் கலந்து
புரண்டோடுவதுபோல, அடங்காத ஆசையினால் பிறக்கும் ஆர்வத்தை
நிலைக்களனாய்க் கொண்டு, அருள் வழிந்தோடும் தொழுகையோடு
கூடிவரும் பெரும் புகழைச் செலுத்தும் முறையாக, பின்வருமாறு சொல்லத்
தொடங்கினான் :

 
                 33
துன்னுயிரை யோம்புமரு டோன்றியெனை யாளு
மென்னுயிரி லின்றுயிரெ னுந்தயையி னல்லோ
யுன்னுயிர ளித்தெமைய ளிப்பவுயர் வீட்டை
மன்னுயிரெ லாமுறவ ருத்தமுறீஇ மாய்ந்தாய்.
 
"துன் உயிரை ஓம்பும் அருள் தோன்றி எனை ஆளும்,
என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய்,
உன் உயிர் அளித்து எமை அளிப்ப, உயர் வீட்டை
மன் உயிர் எலாம் உற, வருத்தம் உறீஇ மாய்ந்தாய்!

     "எங்கும் செறிந்த உயிர்களையெல்லாம் பேணும் அருளோடு இவ்வுலகில்
வந்து தோன்றி என்னை ஆள்பவனும், என் உயிரைக்
காட்டிலும் எனக்கு இனிய உயிர் என்னத் தக்கவனுமாகிய தயை மிக்க
நல்லவனே, உன் உயிரையே வழங்கி எம்மையெல்லாம் மீட்டுக் காக்கவும்,
நிலைபெற்ற மனித உயிர்களெல்லாம் உயர்ந்த வான் வீட்டை அடையவும்,
நீ துன்பங்களை அனுபவித்து இறந்துள்ளாய்!

     'உற்று' என்பது 'உறீஇ' எனச் சொல்லிசை அளபெடை ஆயிற்று,