பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 753

                 உத்தரிப்பிடத்தார் மீட்பு

 
                36
அளிபொதுள வாகியிவை யன்றுதயை நாளா
யொளிபொதுள வேநிதியி னோவியழல் வெந்தார்
களிபொதுள வத்துயர்க டிந்துவர வானோர்
தெளிபொதுள வேகியிடர் தீர்த்தவுயிர் மீட்டார்.
 

அளி பொதுள ஆகி இவை, அன்று தயை நாளாய்,
ஒளி பொதுளவே நிதியின் ஓவி அழல் வெந்தார்
களி பொதுள அத் துயர் கடிந்து வர வானோர்
தெளி பொதுள ஏகி, இடர் தீர்த்த உயிர் மீட்டார்.


     இவையெல்லாம் கருணை மிகுதியால் அங்கு நிகழ்கையில், அன்று
தயவின் நாளாய் இருந்தமையால், பொன் போல் தம் ஒளி மிகுமாறு வருந்தி
உத்தரிப்பிடத்து நெருப்பில் வெந்து கொண்டிருந்தோர்க்கு மகிழ்ச்சி
மிகுமாறு, வானவர் அத்துயரைப் போக்கி வருமாறு தெளிவு மிக்க
வடிவத்தோடு சென்று, பரிகாரக் கடனாகிய துன்பத்தைப் போக்கிய
உயிர்களை மீட்டுக் கொணர்ந்தனர்.

 
               37
ஆசைதரு மல்லலற வவ்வவையுஞ் சேர்ந்தே
சூசைதரு திவ்வியது தித்தொடைதொ டுத்த
வோசைதரு நாமமொரு வாயிரமு மோதிப்
பூசைதரு பூசுபுகழ் பூசறரு வாரால்.
 
ஆசை தரும் அல்லல் அற, அவ் அவையும், சேர்ந்தே,
சூசை தரு திவ்விய துதித் தொடை தொடுத்த
ஓசை தரு நாமம் ஒரு ஆயிரமும் ஓதி,
பூசை தரு பூசு புகழ் பூசல் தருவார் ஆல்.

     உத்தரிப்பிடத்தினின்று வந்த அச்சபையாரும் ஆசை தமக்குத் தந்து
கொண்டிருந்த துன்பம் நீங்கப் பெற்று, பாதலத்துச் சபையாரொடு சேர்ந்து
கொண்டு, சூசை அமைத்துத் தந்த திவ்விய புகழ் மாலையில் தொடுத்து
வைத்த ஓசை கொண்ட ஓராயிரம் பெயர்களையும் சொல்லி, வணக்கம்
செலுத்தும் புகழ் பொதிந்த ஆரவாரம் தந்து நிற்பர்.