பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 757

                     43
வானகத் துவகை செய்யும் வனப்புடைச் சிரத்தை நோக்கீர்
கானகக் கொடிய நெஞ்சார் கண்டக முடியைச் சேர்த்தி
மீனகத் தெளிந்து மின்னென் விழியகத் துருவத் தாக்கி
யூனகத் திரத்தம் பாய வுறுந்துய ருரைப்பப் பாலோ.
 

"வானகத்து உவகை செய்யும் வனப்பு உடைச் சிரத்தை நோக்கீர்
கானகக் கொடிய நெஞ்சார் கண்டக முடியைச் சேர்த்தி,
மீன்நகத் தெளிந்து மின் என் விழி அகத்து உருவத் தாக்கி,
ஊன் அகத்து இரத்தம் பாய, உறுந் துயர் உரைப்பப் பாலோ?


     "வானவர்க்கும் மகிழ்ச்சியூட்டும் அழகு கொண்ட என் தலையைப்
பாருங்கள்! காடு ஒத்த கொடிய நெஞ்சு கொண்ட பகைவர் முண்மூடியை
அதனில் அழுந்தச் சேர்த்தமையால், விண்மீனையும் இகழுமாறு தெளிந்து
மின்னும் என் கண்ணினுள்ளே அம்முள் உருவப் பாய்ந்து, என்
உடலெல்லாம் இரத்தம் பாயவே, அதனால் அடையும் துயரம் உரைக்கக்
கூடுமானதோ?

 
                     44
பகையர சொழித்தொன் றாய்நான் படைத்தளித் தழிப்ப வல்ல
தகையர சாகி மாக்க டஞ்செருக் கொழிப்ப வென்னை
நகையர சாக்கி நீசர் நகைத்துமுண் மகுடஞ் சூட்டி
மிகையர சாகி யாய வெருவிடு முருவங் காணீர்.
 
"பகை அரசு ஒழித்து, ஒன்றாய் நான் படைத்து அளித்து அழிப்ப
                                           வல்ல
தகை அரசு ஆகி, மாக்கள் தம் செருக்கு ஒழிப்ப, என்னை
நகை அரசு ஆக்கி, நீசர், நகைத்து, முள் மகுடம் சூட்டி,
மிகை அரசு ஆகி, ஆய வெருவிடும் உருவம் காணீர்!

     "எனக்குப் பகையான எதிர் அரசென்று ஒன்றும் இல்லாது அமைந்து,
ஒரே அரசனாய் நானே படைத்தும் காத்தும் அழிக்க வல்ல தகுதி வாய்ந்த
அரசனாய் இருந்தும், மக்கள் தம் அகந்தையால் விளையும் பாவத்தை
ஒழிக்கும் பொருட்டு, அந்நீசர், என்னைப் பரிகாச அரசனாக்கி, இகழ்ந்து,
முண்முடி சூட்டி, அதனால் நான் ஒரு துன்ப அரசனாய் மாறி, அதனால்
உண்டான அஞ்சத் தக்க என் உருவத்தையும் பாருங்கள்!

     'படைத்தளித் தழிப்ப வல்ல' என்ற முத்தொழில் கடவுள் வாழ்த்து
முதல் பாட்டில் வருதல் காண்க.