பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 758

                      45
கண்வழி யுயிரைப் போக்கிக் கண்டவை வெஃகி வெஃகும்
விண்வழி யொழித்த தீது விலகுவான் கொடியர் கையாற்
புண்வழி குருதி யோடப் பூவென வாடி வான்மீ
னொண்வழி கடந்த வென்கண் ணொளியொழிந் திருள னோக்கீர்.
 
"கண்வழி உயிரைப் போக்கி, கண்டவை வெஃகி, வெஃகும்
விண்வழி ஒழித்த தீது விலகுவான், கொடியர் கையால்
புண்வழி குருதி ஓட, பூ என வாடி, வான்மீன்
ஒண்வழி கடந்த என்கண் ஒளி ஒழிந்து இருளல் நோக்கீர்!

     "மனிதர் தம் கண் வழியாகத் தம் உயிரை ஈடுபடுத்தி, அக்கண்கள்
கண்ட இவ்வுலகப் பொருள்களையே விரும்பி, விரும்பத்தக்க வானுலக
நெறிகளை விட்டொழித்த பாவத்தைத் தீர்க்கும் பொருட்டு, கொடியவர்
கையால் அமைந்த புண்ணினின்று வடிந்த இரத்தம் தம்மீது பாய்ந்தோடவே,
மலர்போல் வாடி, விண்மீனின் ஒளித்தன்மையையும் கடந்த என் கண்கள்
ஒளி இழந்து இருள்வதையும் பாருங்கள்!

 
                    46
தேனுகு முரையால் யார்க்குந் தெருளுகு மருந்து மான
மீனுகும் வானோ ரேத்தும் வேதநூ லுலகிற் றந்த
கானுகுங் கமல வாயே கடிதடி மிதிபட் டந்தோ
வூனுகு முதிரந் தோய்ந்த வுதட்டலர் வாட னோக்கீர்.
 

"தேன் உகும் உரையால், யார்க்கும் தெருள் உகும் மருந்து மான,
மீன் உகும் வானோர் ஏத்தும் வேத நூல் உலகில் தந்த
கான் உகும் கமல வாயே, கடிது அடி மிதிபட்டு, அந்தோ,
ஊன் உகும் உதிரம் தோய்ந்த உதட்டு அலர் வாடல் நோக்கீர்!


     "தேனைப் பொழியும் சொற்களால், யாவருக்கும் தெளிவைப்
பிறப்பிக்கும் அமுதம் போல, விண்மீன்கள் இறைந்து கிடக்கும்
வானுலகத்தவரும் போற்றும் வேத நூலை, இவ்வுலகிற்கு உரைத்துத் தந்த
மணம் பொழியும் தாமரை மலர் போன்ற வாயுமே, அடியும் மிதியும்
மிகுதியாகப்பட்டதனால், ஐயோ, உடலினின்று சொரியும் இரத்தம் தோய்ந்து
உதடுகளாகிய மலர்கள் வாடியிருத்தலையும் பாருங்கள்!