பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 767

     பாவங்களுக்கு யார் யார் ஒப்புச் சொல்லிக் காட்டுவார்!

 
                   61
வேண்டா வின்பம் வெஃகிய தன்மை விளைதீதாற்
றாண்டா வின்மை கொண்டுபி றந்தாய் தகுதண்மை
பூண்டாய் புன்கண் பாலென வுண்டாய் புரிவோங்கி
மாண்டா யோர்கைம் மாறுவ ழங்கக் கடவேமோ.
 
"வேண்டா இன்பம் வெஃகிய தன்மை விளை தீதால்,
தாண்டா இன்மை கொண்டு பிறந்தாய்! தகு தண்மை
பூண்டாய்! புன்கண் பால் என உண்டாய்! புரிவு ஓங்கி
மாண்டாய்! ஓர் கைம்மாறு வழங்கக் கடவேமோ!

     "வேண்டாத இன்பத்தை நாங்கள் விரும்பிய தன்மையால் விளைந்த
பாவத்தின் காரணமாக, தாண்ட இயலாத வறுமையை ஏற்றுக்கொண்டு நீ
பிறந்தாய்! அதற்குத் தகுந்த தாழ்மையை அணிந்து கொண்டாய்!
துன்பத்தைப் பாலாக அருந்தினாய்! அதன் மேலும், அன்பு மிகுந்து உயிர்
துறந்தாய்! இவற்றிற்கெல்லாம் நாங்கள் ஏதேனும் கைம்மாறு
செய்யக்கடவோமோ!

 
                   62
பொய்மா றுகின்றா யாசைவி ளைக்கும் புரையுய்த்த
மைமா றுகின்றாய் பேயுரு நாக வயநூறிப்
பைமா றுகின்றாய் நிற்கென வெம்மாற் பயனுண்டாய்க்
கைமா றுனக்கே யாங்கள்வ ழங்கக் கடவேமோ?
 
"பொய் மாறுகின்றாய்; ஆசை விளைக்கும் புரை உய்த்த
மை மாறுகின்றாய்; பேய் உரு நாக வயம் நூறி,
பை மாறுகின்றாய்; நிற்கு என எம்மால் பயன் உண்டு ஆய்,
கைமாறு உனக்கே யாங்கள் வழங்கக் கடவேமோ?

     "பொய்யை மாற்றுகின்றாய்; ஆசை விளைவிக்கும் பாவம் இவ்வுலகில்
கொண்டு விட்ட மயக்கத்தை மாற்றுகின்றாய்; நாக உருவாக வந்த பேயின்
வல்லமையை அழித்து, அதன் விரித்த படத்தை வலுவற மாற்றுகின்றாய்;
எங்களால் உனக்கென ஒரு பயனும் உண்டென்று காட்டும் தன்மையாய்,
நாங்கள் உனக்கு ஏதேனும் கைம்மாறு வழங்கக் கடவோமோ?