பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 768

      'மாறுகின்றாய்' எனத் தன்வினையாக நின்றவற்றை,
'மாற்றுகின்றாய்' எனப் பொருள் நோக்கிப் பிறவினையாகக் கொள்க.
'பேய் உரு நாகம்' என்பதனை 'நாக உருப் பேய்' என மாற்றுக.

 
                63
உன்னை யுள்ள சீர்க்கறி யோமே யுலகுள்ள
முன்னை பின்னை யாமறி யோமே முரியாம
னின்னை யேத்தி நன்னெறி நிற்ப வறியோமே
பின்னை யோர்கைம் மாறுபி ணிக்கக் கடவேமோ.
 
"உன்னை, உள்ள சீர்க்கு, அறியோமே; உலகு உள்ள
முன்னை பின்னையாம் அறியோமே; முரியாமல்
நின்னை ஏத்தி நல் நெறி நிற்ப அறியோமே;
பின்னை, ஓர் கைம்மாறு பிணிக்கக் கடவேமோ?

     "உண்மையாக உள்ள உனது பெருமையின் அளவுக்கு ஏற்ப உன்னை
நாங்கள் அறியோமே; முன்னேயும் பின்னேயும் இவ்வுலகில்
உள்ளவற்றையுமே நாங்கள் அறியோமே; நல்லுறவு சிதையாமல் உன்னையே
போற்றி நன்னெறியில் நிலைக்கவும் அறியோமே; அப்படியிருக்க, உனக்கு
ஒரு கைம்மாறு நாங்கள் பொருத்தமான முறையில் செய்யக் கடவோமோ?

 
               64
தாயு நீயே தந்தையு நீயே தவறாநன்
றீயு நீயே யென்றறி வோமே இதுவல்லாற்
காயும் பாவத் தன்மையு நின்றன் கனியன்பு
மாயுங் காலத் தஃதறி யோநா மறியோமே.
 
"தாயும் நீயே, தந்தையும் நீயே, தவறா நன்று
ஈயும் நீயே என்று அறிவோமே; இது அல்லால்,
காயும் பாவத் தன்மையும், நின்தன் கனி அன்பும்
ஆயும் காலத்து, அஃது அறியோம் நாம் அறியோமே!

     "எங்களுக்குத் தாயும் நீயே, தந்தையும் நீயே, தவறாத
நன்மையெல்லாம் தருபவனும் நீயே என்று மட்டும் நாங்கள் அறிவோம்;
இதுவே அல்லாமல், துன்பந்தரும் பாவத்தின் தன்மையும், உனது இனிய
அன்பின் தன்மையும் இன்னதென்று ஆராயும் காலத்து, அது இன்னதென்று
நாங்கள் அறியவே அறியோம்!