பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 769

                  65
பாயோர் செந்நீர் கொண்டுன தங்கப் படமீதே
நீயோ நாமோ விவ்வரி வைத்த நிலையென்போ
மாயா வஞ்சத் திவ்வரி நாஞ்செய் வரியென்றா
லோயா வன்பா லுன்வரி யென்றா லுரைபொய்யோ.
 

"பாய் ஓர் செந்நீர் கொண்டு, உனது அங்கப் படம் மீதே
நீயோ, நாமோ, இவ் வரி வைத்த நிலை, என்போம்?
மாயா வஞ்சத்து, இவ் வரி, நாம் செய் வரி என்றால்,
ஓயா அன்பால் உன் வரி என்றால், உரை பொய்யோ?


     "பாய்ந்த ஒப்பற்ற இரத்தத்தைக்கொண்டு, உனது உடலாகிய திரையின்
மீது இவ் வரிகளை எழுதி வைத்த நிலை, நீ செய்தது என்போமோ, நாங்கள்
செய்தது என்போமோ? இவ்வரிகள் நீங்காத வஞ்சகத்தோடு நாங்கள் எழுதி
வைத்த வரிகள் என்றாலும், நீங்காத அன்பால் நீயே அமைத்துக் கொண்ட
உன் வரிகள் என்றாலும், இரண்டு உரையும் பொய்யாகுமோ?

 
                 66
பற்றக் கற்போர் நூற்பல கற்றாற் பயனென்னோ
வொற்றக் கற்றா லிவ்வரி யொன்றே யுணர்வெல்லா
முற்றக் கற்பா ராயினு மெம்மால் முழுதாகா
கற்றக் கட்டா நுண்பொருள் காட்டாய் கலைவல்லோய்.
 
"பற்றக் கற்போர். நூல் பல கற்றால் பயன் என்னோ?
ஒற்றக் கற்றால், இவ் வரி ஒன்றே, உணர்வு எல்லாம்
முற்றக் கற்பார். ஆயினும் எம்மால் முழுது ஆகா,
கற்று, அக் கட்டா நுண் பொருள் காட்டாய், கலை வல்லோய்!

     "பற்றுக் கொண்டு கற்போரும், நூல் பல கற்றாலும் அடையும் பயன்
என்ன? உன் உடலில் எழுதப்பட்ட இவ் வரி ஒன்றை மட்டுமே ஆழ்ந்து
கற்றால், அறிவு வகையெல்லாம் முற்றக் கற்றவர் ஆவார். ஆயினும், அது
எங்களால் முற்றிலும் ஆகக் கூடிய செயலன்று. எனவே, கல்வியில்
வல்லவனே, எங்களூக்காக நீயே அவ்வரிகளைக் கற்று, கட்டுக்கடங்காத
நுண்ணிய பொருள்களை எங்களுக்கு விளக்கிக் காட்டுவாய்.

     'ஆகாது' என்பது 'ஆகாத செயல்' என்ற பொருளில், 'ஆகா' என
ஈறுகெட்ட பெயரெச்சமாக நின்றது.