பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 77

                        20
பிழையிடைக் குளித்தநோய் பெயர்க்க லோர்ந்துவா
னுழையிடைக் குளித்தபல் லுறைவிண் டாண்டிமின்
மழையிடைக் குளித்தென வளர்ந்த பன்மலை
நுழையிடைக் குளித்தரு ணுதலிப் போயினார்.
 
பிழையிடைக் குளித்த நோய் பெயர்க்கல் ஓர்ந்து,
வான் உழை இடைக் குளித்த பல் உறை விண் தாண்டி மின்
மழையிடைக் குளித்தென, வளர்ந்த பல் மலை
நுழை இடைக் குளித்து அருள் நுதலிப் போயினார்.

      பாவத்தினுள் மூழ்கிக் கிடத்தலாகிய துன்பத்தைக் கருணை
யனிடமிருந்து நீக்குதலைக் கருதி இவர்கள் சென்றனர். அதற்கென உயர்ந்த
பல மலைகளிடையே நுழைந்து செல்லும் வழிகளில் மறைந்து சென்றனர்.
அதனால் ஏற்படும் வருத்தத்தைக் கருதாமல், அவனுக்கு அருள்
செய்தலையே கருதிப் போயினர். மலைகளிடையே அவர்கள் மறைந்து
சென்றது வானத்தில் இடந்தோறும் தன்னுள் மறைந்து கிடந்த பல
துளிகளைச் சொரிய விடும் ஒரு மேகத்தைத் தாண்டி மற்றொரு மேகத்தினுள்
மின்னல் சென்று மறைதலை ஒத்திருந்தது.

      மேகம் மலைக்கும் மின்னல் அவ்விருவருக்கும் உவமை.
'பிழைநோய்' என்றது ஆதித்தாய் தந்தையர் செய்த முதற் பாவத்தின்
காரணமாக அவர்தம் சந்ததியார் கொண்டு பிறக்கும் கருவினைக் கறை.

 
                         21
தீய்முகத் திணங்கிலா தில்லை செஞ்சுடர்
காய்முகத் திருளிலை கழுமு நீத்தமே
பாய்முகத் தணையிலை யன்பு பற்றிய
வாய்முகத் தரியதோர் வருத்த மில்லையால்
 
தீய் முகத்து இணங்கிலாது இல்லை; செஞ்சுடர்
காய் முகத்து இருள் இலை; கழுமு நீத்தமே
பாய் முகத்து அணை இலை; அன்பு பற்றிய
வாய் முகத்து அரியது ஓர் வருத்தம் இல்லை ஆல்.