பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 78

      தீயின் முன் எரிய இணங்காத பொருள் இல்லை; கதிரவன் எரிகின்ற
இடத்தில் இருள் இல்லை; பெருகுகின்ற வெள்ளம் பாய்ந்தோடும் இடத்திலே
தடுக்கக் கூடிய அணை இல்லை. அது போலவே, அன்பு பற்றிக் கொண்ட
இடத்துத் தாங்குவதற்கு அரிதான வருத்தமென்று ஒன்று இல்லை.

      
இப்பாடல் வேற்றுப் பொருள் வைப்பணி. 'தீ' என்பது எதுகை
நயத்திற்காகத் 'தீய்' என வந்தது. 'ஆல்' அசை.

 
                 22
துணியுடை யுணர்விடுந் துணிவுற் றன்பினா
லணியுடை யலரடி வருத்தத் தஞ்சிலார்
பிணியுடை வரைகளும் பிரிந்த நெட்டிடைக்
கணியுடை நெறிகளுங் கடிதி னீந்தினார்.
 
துணி உடை உணர்வு இடும் துணிவு உற்று, அன்பினால்
அணி உடை அல் அடி வருத்தத்து அஞ்சிலார்;
பிணி உடை வரைகளும், பிரிந்த நெட்டிடைக்
கணி உடை நெறிகளும் கடிதின் நீந்தினார்.

      அவ்விருவரும் தெளிவுள்ள உணர்வு தரும் துணிச்சலைப் பெற்று,
அக் குழந்தைமீது கொண்ட அன்பினால், தங்கள் அழகிய மலர் போன்ற
கால்களுக்கு ஏற்படும் வருத்தத்திற்கு அஞ்சவில்லை. துன்பம் நிறைந்த
மலைகளையும், அவற்றைவிட்டுப் பிரிந்த நெடிய வேங்கை மரங்கள்
நிறைந்த வழிகளையும் விரைவாகக் கடந்து சென்றனர்.

      வழிநடை வருத்தமும் தொலைவும் நோக்கி, 'நீந்தினார்' எனப்பட்டது.
நெட்டிடை - நெடுமை + இடை எனப் பிரியும்.

 
                    23
யாப்புரி யன்பினா ரையென் றேகலுந்
தூப்புரி முத்தணி தோன்றச் சூழ்முகைக்
காப்புரி வலர்ந்தநீ ணெறிக டந்துபோய்ப்
பூப்புரி யெயினலம் பொலிய நோக்கினார்.
 
யாப்பு உரி அன்பினார் ஐயென்று ஏகலும்,
தூப் புரி முத்து அணி தோன்றச் சூழ் முகைக்
காப் புரிவு அலர்ந்த நீள் நெறி கடந்து போய்,
பூப் புரி எயில் நலம் பொலிய நோக்கினார்.