பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 79

      செய்யுள் அமைப்புப்போல் தம்முள் கட்டப்பட்ட அன்புடையரான
சூசையும் மரியும் விரைந்து சென்றனர். காடுகளில் மொட்டுகள் இதழ்க்கட்டு
விரிந்து தூய வடமாகக் கோத்து முத்து மாலை போல் விளங்கும் நெடிய
வழிகளைக் கடந்தனர். அழகுடன் விளங்கும் மதிலின் சிறப்பைப்
பொலிவுடன் நோக்கினர்.

 
                  24
மின்னெதிர் விளக்கென விரிந்து வில்செயப்
பொன்னெதிர் மணியெனப் புரிந்த வன்பினாற்
றன்னெதி ரிலார்க்குமுன் சக்க ரீயனுந்
துன்னெதிர் துணைவியுந் தொழுதெ றிர்ந்தனர்.
 
மின் எதிர் விளக்கு என விரிந்து வில் செயப்
பொன் எதிர் மணி என, புரிந்த அன்பினால்,
தன் எதிர் இலார்க்கு முன் சக்கரீயனும்
துன் எதிர் துணைவியும் தொழுது எதிர்ந்தனர்.

      தமக்கு நிகர் பிறர் எவரும் இல்லாத சூசையும் மரியாளும் வருதலை
உள்ளுணர்வால் அறிந்த சக்கரீயனும் அவனோடு நெருங்கிய உறவோடு
ஏவலுக்கு எதிர் நிற்கும் துணைவி எலிசபெத்தையும விருப்பங் கலந்த
அன்பினால் தூண்டப்பெற்று அவர்களைத் தொழுது எதிர்கொண்டனர்.
அது மின்னலை விளக்கு எதிர் கொள்வது போலவும் விரிந்து ஒளியைப்
பரப்பிப் பொன்னை மணி எதிர்கொள்வது போலவும் இருந்தது.

 
                25
நீர்த்தமெய் யுயிரினைத் தழுவு நீர்மையாற்
சீர்த்தருந் தவர்தமைத் தழுவித் தேன்மலர்
போர்த்தகொம் பணைத்தபூங் கொடியைப் போலருட்
கூர்த்தநன் மாதருங் குடங்கை வீக்கினார்.
 
நீர்த்த மெய் உயிரினைத் தழுவும் நீர்மையால்
சீர்த்த அருந்தவர் தமைத் தழுவி, தேன் மலர்
போர்த்த கொம்பு அணைத்த பூங்கொடியைப் போல், அருள்
கூர்த்த நல்மாதரும் குடங்கை வீக்கினார்.

     அவ்வாறு எதிர்கொண்டதும், சிறந்த தவத்தோராகிய சூசையும்
சக்கரீயனும் பொருந்திய உடல் உயிரைத் தழுவிக் கொள்வதே போல்
ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர். அருளில்மிக்க நல்ல மாதராகிய