பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 80

மரியாளும் எலிசபெத்தையும் தேன் நிறைந்த மலர்கள் பொதிந்த கொம்பு
பூங்கொடியை அணைத்த தன்மை போல், முன்கையால் ஒருவரையொருவர்
கட்டித் தழுவிக் கொண்டனர்.

      சீர்த்த + அரும் + தவர் = 'சீர்த்த வருந்தவர்' என வர வேண்டியது
தொகுத்தல் விகாரமாய்ச் 'சீர்த்தருந்தவர்' என நின்றது. 'தழுவி' என்பது
'செய' என்ற எச்சப் பொருளில் வந்தது.

 
                      26
அள்ளிய வலர்களு மலருள் வாசமுந்
தெள்ளிய கனிகளுங் கனியுட் டேறலும்
வள்ளிய மணிகளு மணியுள் வாமமு
முள்ளிய நிலைத்தவ ருறைந்த சீர்மையே.
 
அள்ளிய அலர்களும் அலருள் வாசமும்,
தெள்ளிய கனிகளும் கனியுள் தேறலும்
வள்ளிய மணிகளும் மணியுள் வாமமும்
உள்ளிய நிலைத்து அவர் உறைந்த சீர்மையே.

      அந்நால்வரும் அங்கே சேர்ந்து தங்கிய சிறப்பு எத் தன்மையது?
நெருங்கிப் பூத்த மலர்களும் அம்மலருள் அமைந்து கிடந்த மணமும்
தெளிந்த கனிகளும் அக்கனியுள் அமைந்து கிடந்த கனிச்சாறும், நெருங்கப்
பதித்த மணிகளும் அவற்றின் ஒளியும் என்று கருதத்தக்க தன்மையாய்
இருந்தது.

                கருணையனுக்கு அருளினமை

      - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்

 
                       27
வற்றி யேமுகின் மாரிசெய் வாரியாற்
பெற்றி யேபெறு மோடையிற் பெற்றநாள்
முற்றி யேநய முற்றுறச் சூலரு
ளுற்றி யேயெனக் கன்னியு ரைத்தனள்.