பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 81

''வற்றியே முகில் மாரி செய் வாரியால்
பெற்றியே பெறும் ஓடையின், பெற்ற நாள்
முற்றியே, நயம் முற்று உறச் சூல் அருள்
உற்றியே!'' எனக் கன்னி உரைத்தனள்.


      கன்னி மரியாள் எலிசபெத்தை நோக்கி, ''கோடையில் வற்றியிருந்து
மழைக் காலத்தில் மேகம் பொழியும் வெள்ளத்தால் நல்லியல்பு பெறும்
ஓடை. அதுபோல, மகவு பெறுதற்குரிய நாள் முடிந்த பின்னரும் இன்பம்
நிறைவு பெறுமாறு இறைவன் அருளால் கருப்பம் அடைந்தாயே!'' என்று
பாராட்டினாள்.

 
                      28
உரைத்த வாய்மை யிருசெவி யூடினி
திரைத்த வாண்மையி லேந்திய சூலுறை
வரைத்த வாமம கன்கரு மாசறக்
கரைத்த வாயில னுட்களித் தானரோ.
 
உரைத்த வாய்மை இரு செவி ஊடு இனிது
இரைத்த ஆண்மையில், ஏந்திய சூல் உறை
வரைத்த வாம மகன் கரு மாசு அற,
கரைத்த வாய் இலன் உள் களித்தான் அரோ.

      மரியாள் சொன்ன வாய்ச்சொல் அக்குழந்தையின் இரு செவிகளின்
ஊடே சென்று இனிதாக இரைந்தது. அவ்வாறு இரைந்த வல்லமையால்,
எலிசபெத்தை தாங்கிய கருப்பப்பையை எல்லையாகக் கொண்டிருந்த
அழகிய மகனின் கருவினை நீங்கியது. நீங்கவே, அம்மகன் சொல்வதற்கு
வாய் இல்லாமையால் தன் மனத்துள் மகிழ்ந்தான்.

     'அரோ' என்பது அசை. இரைந்த, கரைந்த என்பன வலித்தல்
விகாரமாய் இரைத்த, கரைத்த என நின்றன.

 
                   29
நிருதி வாய்திறந் தங்கையி னேரருட்
கருதி வாய்திறந் தாசிக தைத்தலாற்
பருதி வாய்திறந் தள்ளிருள் பட்டெனச்
சுருதி வாய்திறந் தாசுது டைத்தனள்.