பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 82

நிருதி வாய் திறந்து அம் கையின் நேர், அருள்
கருதி வாய் திறந்து ஆசி கதைத்தலால்,
பருதி வாய் திறந்து அள் இருள் பட்டெனச்
சுருதி வாய் திறந்து ஆசு துடைத்தனள்.


      வள்ளல் ஒருவன் வாய் திறந்த அளவிலே அவனது கை கொடைக்கு
முந்தும். அதுபோல, மரியாள் கருணையனுக்கு அருள் செய்யக் கருதித் தன்
வாய் திறந்து எலிசபெத்தைக்குப் பல சொல்லி வாழ்த்தினாள். கதிரவன்
வாய் திறந்ததும் உலகெங்கும் செறிந்த இருள் அழிவதுபோல, அவள் தன்
வேத வாயைத் திறத்தலால் கருணையன் கொண்டிருந்த கருவினையும்
நீக்கினாள்.

 
                      30
துடைத்த வாசறச் சூலுறை தோன்றலாங்
குடைத்த யாநிக ருந்தவிர்ந் துள்ளுணர்
விடைத்த யாபமோ டீந்தவ ரத்தொகை
படைத்த நாதன ருட்பய னெய்தினான்.
 
துடைத்த ஆசு அற, சூல் உறை தோன்றல் ஆங்கு
உடைத் தயா நிகரும் தவிர்ந்து உள்ளுணர்வு
இடைத் தயாபமோடு ஈந்த வரத் தொகை
படைத்த நாதன் அருட் பயன் எய்தினான்.

      மரியாள் துடைத்ததனால் அப்பாவம் நீங்கப்பெற்று, தாயின்
கருப்பத்தில் தங்கியிருந்த அம்மகன் அங்கே பெற்றுக்கொண்ட அருளுக்கு
நிகரே இல்லை. படைத்த ஆண்டவன் இரக்கத்தோடு ஈந்த
பெருந்தொகையான வரங்களையும், திருவருளாகிய பயனையும் தனது உள்
உணர்வில் அடைந்தான்.

 
                      31
முகையின் முற்றிய வாசமெ னாமுதிர்
தகையின் கன்னிவ யிற்றிடைத் தற்பர
னகையின் றன்மையிற் கண்டுந யந்தருட்
டொகையி னங்கவன் றாடொழு தேத்தினான்.
 
முகையின் முற்றிய வாசம் எனா, முதிர்
தகையின் கன்னி வயிற்றிடைத் தற்பரன்
நகையின் தன்மையின் கண்டு நயந்து, அருள்
தொகையின் அங்கு அவன் தாள் தொழுது ஏத்தினான்.