பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 83

      முற்றிய மொட்டின் மணம் வெளிப்படுதல் போல, முதிர்ந்த
அன்புள்ள கன்னித் தாயின் வயிற்றிலிருந்த ஆண்டவரே, புன்முறுவல்
செய்த தன்மையில் காட்சியாகக் கண்டு கருணையன் மகிழ்ந்தான்; அதனால்
தான் பெற்ற அருளின் தொகைக்கு ஏற்ப, தன் அன்னையின் கருப்பத்தில்
இருந்தவாறே அவ்வாண்டவனின் அடியைத் தொழுது போற்றினான்.

 
                  32
ஏற்ற ருங்குணத் தேத்திய நாதனு
மாற்ற ருங்குணத் தாய்வயிற் றின்பொடு
தூற்ற ருங்குணத் தோன்றலை நோக்கலாற்
சாற்ற ருங்குணத் தாரரு டாங்கினான்.
 
ஏற்று அருங் குணத்து ஏந்திய நாதனும்,
மாற்று அருங் குணத் தாய் வயிற்று இன்பொடு
தூற்று அருங்குணத் தோன்றலை நோக்கலால்,
சாற்று அருங் குணத்து ஆர் அருள் தாங்கினான்.

      அவ்வாறு போற்றப்பெற்ற ஆண்டவனும் தன் அருங்குணத்திற்கு
ஏற்ப அதனை ஏற்றுக் கொண்டான்; மாற்றத்திற்கு இடமில்லாத குணம்
கொண்ட தன் தாய் வயிற்றில் இருந்தவாறே, பழிப்பிற்கு இடமில்லாத குணம்
படைத்த அம்மகனை இன்பமாய் நோக்கினான். அதனால், அம்மகன்
சொல்லுவதற்கு அரிய குணத்தைத் தரக் கூடிய நிறைந்த அருளைப் பெற்றுக்
கொண்டான்.


     
'ஏத்திய நாதனும் அருங்குணத்து ஏற்று' என மாற்றிக் கூட்டுக. மாற்ற
அருங்குணம், தூற்ற அருங்குணம், சாற்ற அருங்குணம் என்று தொகுத்தல்
விகாரங்களை விரித்துக்கொள்க.

                  எலிசபெத்தை வாழ்த்து

 
                 33
மாரி யாற்புர ளாறென மைந்தனுட்
டாரி யாற்றகு சால்பரு டன்மைமேல்
வாரி யாற்புரண் டன்னையு மல்கொளி
மூரி யாற்றுதி முற்றெடுத் தோதினாள்.