பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 771

நீக்கி எழுந்து, தன் விலாவினோடு இரு கை கால்களிலும் பதிந்து கிடந்த
காயங்கள் ஐந்தும், விண்மீன்களே பதிந்து கிடந்தாற் போல் ஒளி வீச,
அவ்வுடலில் அணிந்து கொண்டான்.

 
                 69
விண்வி ளக்கிய வெஞ்சுட ரெழுந்தென வெழுந்து
மண்வி ளக்கிய மணியொளித் தொளியணி தயங்கக்
கண்வி ளக்கிய கவின்மனம் விளக்கநின் றெந்தை
பண்வி ளக்கிய பனிமதுப் பணிமொழி பகர்ந்தான்.
 

விண் விளக்கிய வெஞ் சுடர் எழுந்து என எழுந்து,
மண் விளக்கிய மணி ஒளித்த ஒளி அணி தயங்க,
கண் விளக்கிய கவின் மனம் விளக்க நின்று, எந்தை,
பண் விளக்கிய பணி மதுப் பணி மொழி பகர்ந்தான் :

      நம் தந்தையாகிய ஆண்டவன், வானத்தை விளங்கச் செய்யும்
பொருட்டு ஞாயிறு எழுந்தாற் போலத் தானும் உடலோடு எழுந்து
மண்ணுலகில் ஒளி விளங்கச் செய்யும் மணிகளெல்லாம் மறைந் தோடத்தக்க
ஒளியுள்ள அணிகலன்கள் போல அவ்வுடலில் விளங்க, கண்ணுக்கு
இனிதாய்த் தோன்றிய அழகு கண்டார் மனத்தையும் விளக்க நின்று
இசையை விளங்கச் செய்த குளிர்ந்த தேன் போன்ற பணிவான சொற்களால்,
பின்வருமாறு, சூசைக்குச் சொல்லலானான் :

     முதலடியில் 'விளக்கிய' என்பது, 'விளக்க' எனப் பொருள்படும்,
'செய்யிய' என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ஒளித்த + ஒளி = ஒளித்த
வொளி எனற் பாலது, தொகுத்தல் விகாரமாய், 'ஒளித் தொளி' என நின்றது.

 
               70
தீய்மு கத்துல கழிவுறுங் காலறஞ் சினந்த
பேய்மு கத்தெனைப் பெயர்கிலார்க் கியல்பிதென் றறிய
நோய்மு கத்திறந் தரியதூ துரைப்பநீ நுதலி
வீய்மு கத்திவண் விட்டமெய் யெடுத்தெழு கென்றான்.