பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 772

"தீய் முகத்து உலகு அழிவு உறுங்கால், அறம் சினந்த
பேய் முகத்து எனைப் பெயர்கு இலார்க்கு இயல்பு இது என்று அறிய,
நோய் முகத்து இறந்து அரிய தூது உரைப்ப நீ நுதலி
வீய் முகத்து, இவண் விட்ட மெய் எடுத்து எழுக" என்றான


     "நெருப்பினால் உலகம் அழிவடையும் காலத்து, அறநெறியை வெறுத்த
பேயினிடத்து என்னை விட்டுப் பெயர்ந்து செல்லாத நல்லோர்க்கு இயல்பு
இதுவென்று அறியும் பொருட்டு, நோயால் நீ மாண்டு அரிய தூது உரைக்கக்
கருதி இறந்த போது, இங்கே விட்டு வந்த உன் உடலை எடுத்துக்கொண்டு
உயிர்த் தெழுவாயாக" என்றான்.

     எழுக + என்றான் - எழுக வென்றான் எனற்பாலது, தொகுத்தல்
விகாரமாய், 'எழுகென்றான்' என நின்றது. 'தீய' 'வீய்' என எதுகை நோக்கி
யகரம் சேர்ந்தது, விரித்தல் விகாரம்.

 
                     71
அலைபு றங்கொளீஇ யாதவ னெழுந்தொளி முகத்திற்
கலைபு றங்கொளீஇக் கவினிறை திங்கள்சேர்ந் ததுபோ
லிலைபு றங்கொளீஇ யேடவிழ் கொடிநலோ னெழுந்தெந்
நிலைபு றங்கொளீ நிமலனைத் தொழுதுமுன் னின்றான்.
 
அலை புறம்கொளீஇ ஆதவன் எழுந்து, ஒளி முகத்தின்
கலை புறம்கொளீஇக் கவின்நிறை திங்கள் சேர்ந்தது போல்,
இலை புறம்கொளீஇ ஏடு அவிழ் கொடி நலோன் எழுந்து, எம்
நிலை புறம்கொளீஇ, நிமலனைத் தொழுது முன் நின்றான்.

     கடலைப் புறத்தே தள்ளி ஞாயிறு எழுந்து தோன்றவும், தன் பதினாறு
கலைகளும் நிரம்பிப் புறஞ் சூழக் கொண்டு அழகு நிறைந்த திங்கள் ஒளி
முகத்தோடு அதன் அருகே சேர்ந்தாற்போல், இலைகளைப் புறத்தே
கொண்டு இதழ்கள் விரியும் மலர்க் கொடியைத் தாங்கிய நல்லவனாகிய
சூசையும் உயிர்த்தெழுந்து நமது நிலை யெல்லாம் வென்று மேம்பட்டு,
குற்றமற்ற திருமகனைத் தொழுது முன்னே நின்றான்.

     'கொண்டு' என்பது 'கொளீஇ' எனச் சொல்லிசை அளபெடை
ஆயிற்று. 'ஆதவன் ... திங்கள் சேர்ந்தது போல்' என்பது 82இல்
'இருமாசுடர் ஒத்து' என வருகிறது.