ஒரு
சிலர், உள்ள பல உலகங்களுக்கும் ஒருவனாய் அமைந்துள்ள
அரசனாகிய ஆண்டவனின் பழமையை உள்ள முறைப்படியே எடுத்துக்
கூறிப் புகழ்வர். மற்றும் ஒரு சிலர், மக்கள் மீது இரங்கிய நினைவோடு
அவன் உடலோடு கூடி ஒரு மனிதனாவதற்கு இசைந்த பெருமையை
எடுத்துக் கூறுவர். வேறு ஒரு சிலர், அவன் அடி படவும் மிதி படவும் உயிர்
பிரியவுமாக வருந்திய கதையை வியந்து கூறுவர். இன்னும் ஒரு சிலர்,
கதிரவன் ஒளியினும் மிகுதியாக இவன் உயிர்த்தெழும் நேரத்தின்
மகிழ்ச்சியை எடுத்துக் கூறித் தொழுவர்.
78 |
அனைவரு மணுகுவர்
நயமிக வுருகுவ
ராசையி
லாசி வழங்கி மெலியார்
சுனைவரு மலரடி தொழுகுவ ரணைகுவர்
சோபன
மாடி யனந்த முடியார்
நினைவரு முணர்வொடு புகழுவர் புகழீசை
நேரில
வாட வருந்தி யொழியார்
புனைவரு மழகுள முகமுகை யயிலுவர்
பூகதர்
பூசை புணர்ந்து பிரியார். |
|
அனைவரும் அணுகுவர்;
நயம் மிக உருகுவர்; ஆசையில் ஆசி
வழங்கி, மெலியார்.
சுனை வரும் மலர் அடி தொழுகுவர்; அணைகுவர்; சோபனம் ஆடி,
அனந்தம் முடியார்.
நினைவு அரும் உணர்வொடு புகழுவர்; புகழ் இசை நேர் இல வாட
வருந்தி, ஒழியார்.
புனைவு அரும் அழகு உள முக முகை அயிலுவர், பூகதர் பூசை
புணர்ந்து, பிரியார். |
இறுதியில்,
அவ்வானவர் அனைவரும் ஒன்றாகத் திருமகனை
அணுகுவர்; இன்ப மிகுதியால் உருகுவர்; ஆசையோடு வாழ்த்து வழங்குவர்;
அதனில் மெலிவு காணார். தடாகத்தில் தோன்றும் தாமரை மலர் போன்ற
திருவடிகளைத் தொழுவர்; அணைத்துக் கொள்வர்; வாழ்த்துப் பாடுவர். தம்
மகிழ்ச்சிக்கு முடிவு காணார். நினைவதற்கரிய உணர்வோடு புகழுவர்;
அவ்வாறு புகழ்வதும் அவனது புகழுக்கு ஒப்பாகாமை கண்டு வாடி
வருந்துவர்; ஆயினும் புகழ்தல் ஒழியார். புனைந்து கூறுவதற்கரிய அழகுள்ள
அம்முகமாகிய மலரைக் கண்களாற் பருகி இன்புறுவர்; புகழ் பாடுவோராய்
அருச்சனை புரிந்து, அந்நிலை நீங்கப் பெறார்.
|