பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 778

     'அனந்தம்' என்பது 'ஆனந்தம்' என்பதன் குறுக்கல் விகாரம்.
'தொழுகுவர்' 'அணைகுவர்' என்பவை 'கு' சாரியை பெற்று விரித்தல்
விகாரம் ஆயின.

 
               79
கனைவிளை கதமில கதமலி பகையில
     காதலி லார்வ மலிந்து பெருக
வினைவிளை நசையில நசைவிளை செயிரில
     மேவிய மேதை யனந்த மிலகச்
சினைவிளை யிழிவில வழிவில வொழிவில
     சீரிய யோக மொருங்கு விளையப்
புனைவிளை நலமுறி யுலகெழ நிகரில
     பூதல மீதி லெழுந்த திறையே
 
கனை விளை கதம் இல, கதம் மலி பகை இல, காதலில் ஆர்வம்
                                   மலிந்து பெருக,
வினை விளை நசை இல, நசை விளை செயிர் இல, மேவிய மேதை
                                   அனந்தம் இலக,
சினை விளை இழிவு இல, அழிவு இல, ஒழிவு இல, சீரிய யோகம்
                                   ஒருங்கு விளைய,
புனை விளை நலம் உறி, உலகு எழ, நிகர் இல, பூதலம் மீதில்
                                   எழுந்தது, இறையே.

     பேரொலி விளைவிக்கும் சினம் இல்லாமல், சினத்தால் வளரும் பகை
இல்லாமல், அன்பினால் ஆர்வமே மலிந்து பெருகவும், வினைகளை
விளைவிக்கும் ஆசை இல்லாமல், ஆசையால் விளையும் பாவம் இல்லாமல்,
தன்னிற் பொருந்திய ஞானமே முடிவில்லாமல் விளங்கவும், கருவாகத்
தோன்றும் இழிவு இல்லாமல், இனி அழிவும் இல்லாமல், ஒழிவும் இல்லாமல்,
சிறந்த செல்வமெல்லாம் ஒருங்கே கொண்டிருக்கவும், கோலப் புனைவினால்
விளையும் அழகெல்லாம் ஒருங்கே பொருந்தவுமாக, இவ்வுலகம் எழுச்சி
கொள்ளுமாறு, ஆண்டவன் நிகரற்றவனாய் இம்மண்ணுலகில் உயிர்த்
தெழுந்தான் :

     இறை' என்ற சொல் 'தெய்வம்' என்ற பொருளில் அஃறிணையாகக்
கொள்ளவும் கிடந்தமையின், 'எழுந்தது' என்றார். அடுத்த பாடலுக்கும் இது
கொள்க.

S