பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 780

வானகம் முதல் எவ் உலகும் வாழ்ந்து உவப்ப,
மீன் நக உரு உற்று எழுந்த மெய்த் திறலோன்,
தேன் அக மொழியாள், தன்னைச் சீர்த்து உயிர்த்தாள்,
தான் நக, மற்றச் சவையோடு ஆங்கு எழுந்தான்.


     வானுலகம் முதல் மற்ற உலகங்கள் யாவும் நல்வாழ்வு பெற்று
மகிழுமாறு, விண்மீனையும் இகழத் தக்க உருவங் கொண்டு உயிர்த்தெழுந்த
மெய்யான ஆற்றல் இயல்பாகக் கொண்டுள்ள ஆண்டவன், தேனின்
இனிமை தன்னிடத்துக் கொண்ட சொல்லை உடையவளும், தன்னைச்
சிறப்பான முறையில் பெற்றெடுத்தவளுமாகிய மரியாள், தானும் மகிழ்ச்சி
கொள்ள, மற்றப் பாதலத்தோர் கூட்டத்தோடு அவள் இருந்த இடத்தில்
எழுந்தருளினான்.

     கன்னிமைக்குப் பழுதின்றி மகவைப் பெற்ற திறம் இங்குக் கருதிய
சிறந்த முறை என்க. 'சபை' என்பதின் போலி 'சவை'

 
               82
ஒளிமுகத் திருமா சுடரோ டொத்திருவர்
தெளிமுகத் திலங்க வெடுத்த சீருடலைக்
களிமுகத் தவளே கண்டாள் கண்டடிவீழ்ந்
தளிமுகத் திறைஞ்சி யயின்ற நோயொழிந்தாள்.
 
ஒளி முகத்து இரு மா சுடர் ஒத்து, இருவர்
தெளி முகத்து இலங்க எடுத்த சீர் உடலை,
களி முகத்து அவளே கண்டாள்; கண்டு, அடி வீழ்ந்து,
அளி முகத்து இறைஞ்சி, அயின்ற நோய் ஒழிந்தாள்.

     திருமகனும் சூசையுமாகிய இருவரும் ஒளியின் தன்மையைப் பொறுத்த
வரையில் ஞாயிறும் திங்களுமாகிய இருபெருஞ் சுடர்களை ஒத்து விளங்கி,
தெளிந்த முகத்தோடு விளங்க எடுத்துக் கொண்டு வந்த சிறந்த உடலை,
அவளும் களித்த முகத்தோடு கண்டாள்; கண்டு, அவ்விருவர் திருவடிகளில்
பணிந்து, அன்பு முகத்தோடு வணங்கி, அதுவரையில் தான் அனுபவித்த
துன்பமெல்லாம் நீங்கப் பெற்றான்.

     'இரு மாசுடர் ஒத்து' என்பது 71இல் 'ஆதவன் ... திங்கள்
சேர்ந்ததுபோல்' என்பதைச் சுட்டுகின்றது.