பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 781

               83
உணங்கிய முல்லைக் குயிர்பெய் நீர்த்துளிபோ
லணங்கிய லுள்ள மலர வக்காட்சி
யிணங்கிய தன்மைத் திழிதே னிணரேற்றி
வணங்கிய வின்பங் கடனீர் வளமாற்றா.
 
உணங்கிய முல்லைக்கு உயிர் பெய் நீர்த் துளி போல்
அணங்கு இயல் உள்ளம் மலர, அக் காட்சி
இணங்கிய தன்மைத்து, இழி தேன் இணர் ஏற்றி
வணங்கிய இன்பம், கடல் நீர் வளம் ஆற்றா.

     வாடிய முல்லைக் கொடிக்கு உயிர் தரப் பொழியும் மழை நீர்த்
துளிபோல, துன்பம் பொருந்திக் கிடந்த தன் உள்ளம் மலருமாறு, அக்
காட்சியைத் தனக்குத் தர இணங்கிய தன்மை கண்டு, தேன் பொழியும்
பூங்கொத்துக்களை அத் திருவடிகளில் இட்டு வணங்கி மரியாள் பெற்ற
இன்பத்திற்கு, கடல் நீரின் வளமும் இணையாகாது,

     'ஆற்றாது' என்பது, கடைக் குறையாய், 'ஆற்றா' என நின்றது.

 
              84
மாயள வரிய மகனைக் கண்டயின்ற
நோயள வின்ப நுகர மற்றநலோர்
மீயள வுடுப்போல் விளங்கக் கண்டுவக்குந்
தாயள விலவாழ் தகையிற் புகழறைந்தாள்.
 

மாய் அளவு அரிய மகனைக் கண்டு அயின்ற
நோய் அளவு இன்பம் நுகர, மற்ற நலோர்
மீ அளவு உடுப் போல் விளங்கக் கண்டு உவக்கும்
தாய், அளவு இல வாழ் தகையின், புகழ் அறைந்தாள்.


     மற்ற நல்லோரும் வானத்தில் உலவும் விண்மீன்கள் போல் விளங்கக்
கண்டு மகிழும் அத் தாய், முன் சிலுவையில் மாய்ந்த போது தன் அரிய
மகனைக் கண்டு அனுபவித்த துன்பத்தின் அளவாக இப்பொழுது இன்பம்
நுகர்ந்து, அளவில்லாத நல்வாழ்வு பெற்ற தன்மையாக, தன் திருமகனின்
புகழை எடுத்துக் கூறினாள்.